சென்னை:
தமிழகத்தில் பெண்கள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தால், 80 சதவீத குழந்தை திருமணங்கள் நின்றுபோகும் என்கிறது ஆய்வறிக்கை.
சேலத்தைச் சேர்ந்த 24 வயது லலிதாவுக்கு நர்ஸ் ஆக ஆசை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர்,வனப்பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால், தினமும் 15 கி.மீ பயணிக்க வேண்டும். பக்கத்தில் உள்ள பேருந்தை பிடிக்க அவர் 3 கி.மீ நடக்க வேண்டும்.
கஷ்டப்பட்டாவது படிக்க வேண்டும் என்று நினைத்தார் லலிதா. ஆனால் அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை.
பள்ளியில் கழிவறை வசதி இல்லாததாலும், பாதுகாப்பு இல்லாததாலும் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.
15 வயதிலேயே மும்பையில் உள்ள உறவினருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைத்தனர்.
அவரது நர்ஸ் ஆசை நிறைவேறவே இல்லை.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இது ஒரு சாம்பிள் தான்.
இதுபற்றி தேசிய குடும்ப நல சர்வேயின் கூற்றுப்படி, 2015-16 ஆண்டில் 16 சதவீதம் பேர் சட்டப்படியான 18 வயது நிறைவடையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சமகல்வி இயக்கம் நடத்திய சர்வேயில், கிராமப் புறங்களில் உயர்நிலைப் பள்ளிகள் இல்லாததும்,குழந்தை திருமணம் நடக்க காரணமாக அமைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணம் நடந்த 86.2% பேருக்கு மேல்நிலைப் பள்ளி இல்லாததால் குழந்தை திருமணம் நடந்துள்ளது. 84.8% பேருக்கு உயர்நிலைப் பள்ளி இல்லாததால் திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்த 46.7% பெண்களின் ஊரில் நடுநிலைப் பள்ளி இல்லை.
கல்வியை பாதியிலேயே நிறுத்தியதால் 62.4% குழந்தைகள் திருமணம் நடந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து சமகல்வி இயக்க தொழில்நுட்ப நிபுணர் ராயன் கூறும்போது, “தமிழகத்தில் மொத்தம் 12,000 பஞ்சாயத்துகள் உள்ளன. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தது 10 ஆயிரம் பேர் வசிப்பர். தமிழகம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 6 ஆயிரம் மட்டுமே உள்ளன.
பள்ளிக்குச் செல்லும் போது பாதுகாப்பு இல்லாததும், பேருந்துகளில் பாலியல் தொந்தரவும் பலரது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் நிலைக்கு தள்ளிவிடுகிறது. குழந்தைத் திருமணம் செய்துகொள்வோரில் 70% பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்” என்றார்.