டில்லி

மோடி தன்னை விமர்சிப்பவர்களை சல்லியன் (ஒரு மகாபாரத பாத்திரம்) எனக் கூறுவதற்கான காரணங்கள் இதோ :

இந்து மதப் புராணங்களில் மிகவும் புகழ்பெற்றவைகள் ராமாயணமும், மகாபாரதமும்.   இரண்டும் இதிகாசங்கள் என போற்றப் படுபவை.  ஒவ்வொரு கதாபாத்திரம் மூலமும் ஒவ்வொரு குண நலன்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. தருமர் என்றால் எப்போதும் தர்மத்தை மீறாதவர்.   கிருஷ்ணர் ஒரு ராஜ தந்திரி.  இது போல பல புகழ் பெற்றவர்கள் இருப்பினும் மோடி தன்னை விமரிசிப்பவர்களை சல்லியன் என அதிகம் புகழ் பெறாத ஒரு பாத்திரத்தை பற்றி சொல்வதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

இன்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது ராஜஸ்தானில் உள்ள குருக்ஷேத்திரத்தில் பாரதப் போர் நடந்ததாக சொல்லப்படுகிறது.   அந்தப் போரில் பாண்டவர்களுக்கு ஆதரவாகவும், கௌரவர்களுக்கு ஆதரவாகவும் பல அரசர்கள் போரில் பங்கு பெற்றனர்.  கிருஷ்ணருடைய படைகள் கௌரவர்க்கு ஆதரவாக போரில் ஈடுபட்டனர்.   ஆனால் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தார்.

மாத்ரா அரசை ஆண்டுக்கொண்டிருந்தவர் சல்லியன்.  இவருடைய சகோதரி பாண்டுவின் இரண்டாம் மனைவி மாத்ரி ஆவார்.   மாத்ரியின் புதல்வர்கள் நகுலன் மற்றும் சகாதேவன்.   எனவே இவர் பாண்டவர்களுக்கு தாய்மாமன் ஆவார்.  தனது மருமகன்களுக்கு உதவ இவர் படைகளுடன் வந்த போது வழியில் துரியோதனன் ஆணைப்படி அவனுடைய ஆட்கள் பாண்டவர் அளிப்பது போல சல்லியனுக்கும் அவர் படைகளுக்கும் உதவ, அவர் தனது உதவியை தங்களை உபசரித்தோருக்கு அளிப்பதாக கூறி விட்டார்.  அதன்படி அவர் கௌரவர்களுக்கு உதவ நேரிட்டு விட்டது.   ஆனால் தம் படைகள் போரிடும் என்றும் தாம் நேரடியாக மருமகன்களை எதிர்க்க மாட்டேன் எனவும் சல்லியன் கூறி விட்டார்.

அதன்படி அவர் கர்ணனுக்கு தேரோட்டியாக பணி ஆற்றினார்.   கர்ணன் தேரோட்டியின் மகன் என அறியப்பட்டவன்.  அதனால் சல்லியனுக்கு கர்ணன் மேல் மதிப்பில்லை.  அவருடைய மருமகன் அர்ஜுனனுக்கு ஒரு போட்டியாளன் கர்ணன் என்பதால் கர்ணன் மேல் சல்லியனுக்கு மிகவும் துவேஷம் இருந்தது.   தேரை செலுத்தும் போதே கர்ணனை தாழ்த்தியும், அர்ஜுனனை உயர்த்தியும் பேசுவது சல்லியனின் வழக்கம்.    அந்த கால வழக்கப்படி தேரோட்டிகள் எதிரியின் பலவீனத்தைப் பற்றி தேரிலுள்ள மன்னனுக்கு அறிவுரை வழங்குவார்கள்.  ஆனால் சல்லியன் அதற்கு நேர்மாறாக கர்ணனின் பலவீனத்தையும், அர்ஜுனனின் பலத்தையும் பற்றிக் கூறி கர்ணனுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

இறுதியில் கர்ணனின் தேர்ச்சக்கரம் மண்ணில் மாட்டிக் கொண்டது.   வழக்கப்படி அதை தேரோட்டி எடுத்து உதவ வேண்டும்.   ஆனால் சல்லியன், “தேர்ச் சக்கரத்தை எடுப்பது தேரோட்டி மகனுக்குத் தான் நன்கு தெரியும்.  நீயே அதை எடுத்துக் கொள்” எனக் கூறி விட்டார்.

இப்போது அனைவருக்கும் மோடி கூறுவதன் பொருள் புரிந்திருக்கும்.  தன்னை ஊக்குவிக்காமல் குறை கூறும் எதிர்க்கட்சிகளை அவர் சல்லியன் எனவும், தன்னை ”தான வீர சூர கர்ணன்” எனவும் குறிப்பிடுகிறார்.   அதே நேரத்தில் சமூக ஆர்வலர்களின் கேள்வி வேறு விதமாக உள்ளது.

”கர்ணன் அவனளவில் நியாயவானாக இருப்பினும் அநியாயம் செய்த துரியோதனனுக்கு துணை போனவன்.  அப்படியானால்  மோடியும் அநியாயத்துக்கு துணை போகிறாரா?  அல்லது சல்லியனை ஏமாற்றி சேவை செய்ய வைத்ததைப் போல் பல பொருளாதார நிபுணர்களை ஏமாற்றி தனது அரசுக்கு சேவை செய்ய வைத்துள்ளாரா?  புராண உதாரணங்கள் காட்டும் போது அது நமது பக்கமே திரும்பி விடும் என்பதை மோடி அறியவில்லை.  அதாவது மோடி இதற்கு முந்தைய மன்மோகன் சிங் அரசுக்கு ஒரு சல்லியன் போலத்தான் நடந்துக் கொண்டார்” என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.