2014 முதல் மோடி அரசு இந்தியாவில் 74 விமான நிலையங்களைக் கட்டியுள்ளதாக பாஜக கூறிவரும் நிலையில் ராஜ்ய சபாவில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ள பதில் அதற்கு மாறாக உள்ளது.

மே 2014 முதல் 11 கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் மட்டுமே செயல்படத் தொடங்கியுள்ளன. கடல் விமானங்களுக்காக கட்டப்பட்ட இரண்டு நீர்நிலை விமான நிலையங்களும் திறப்பு விழாவிற்குப் பிறகு மூடப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

2018 ம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையமான பஃயோங் விமான நிலைய துவக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி 2014 வரை இந்தியாவில் 65 விமான நிலையங்கள் மட்டுமே இருந்ததாகவும் நான்கு ஆண்டுகளில் ஆண்டுக்கு 9 விமான நிலையம் வீதம் தனது ஆட்சியில் கட்டியதாகவும் அப்போது கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஏழு ஆண்டுகளில் 74 விமான நிலையங்களை உருவாக்கியுள்ளதாகவும் இது சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளில் கட்டப்பட்ட விமான நிலையங்களின் எண்ணிக்கைக்கு இணையானது என்று பாஜக அரசு பேசிவருகிறது.

உண்மையில் இந்த காலகட்டத்தில் 11 விமான நிலையங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த 15 விமான நிலையங்கள் இதே காலகட்டத்தில் மூடப்பட்டதாகவும் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

தவிர, இந்த விமான நிலையங்களை செயல்பாட்டில் வைக்க 479 வழித்தடங்களை மத்திய அரசு அறிவித்தது என்றும் அதில் 225 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டாதாகவும் தெரிவித்துள்ளது.

கோவாவில் உள்ள மோபா, மகாராஷ்டிராவின் ஷீரடி மற்றும் சிந்துதுர்க், கர்நாடகாவின் கலபுராகி மற்றும் ஷிவமோக்கா, உத்தரபிரதேசத்தில் குஷிநகர், ஆந்திராவின் ஓர்வகல் (கர்னூல்), மேற்கு வங்கத்தில் துர்காபூர் சிக்கிமில் பாக்யோங், கேரளாவில் கண்ணூர், அருணாச்சலப் பிரதேசத்தில் டோனி போலோ ஆகிய 11 விமான நிலையங்கள் மட்டுமே மோடி அரசால் உருவாக்கப்பட்டதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் ஜூலை 24 அன்று ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட விமான போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் சொற்ப எண்ணிக்கையிலான விமான நிலையங்களை திறந்து வைத்து பாஜக அரசு விளம்பர நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.