மும்பை: வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை;(ரெப்போ) 4% ஆகவே தொடரும் என்றும், 2022-23 நிதியாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.8% என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கூடுவது நடைமுறை. அதன்படி இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், முக்கியமான வட்டி விகிதங்களில் எந்த மாற்றம் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுக கால கடன்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4% ஆக தொடரும் என்றவர், பணப்புழக்கத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியில், வங்கிகள் செய்யும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ) 3.35% ஆகவே தொடரும் என்றும், வீடு, கடன்களுக்கான வட்டி விகிதம் அதே நிலையிலேயே இருக்கும் என்றும் கூறினார்,.
2021-22 நிதியாண்டில் CPI பணவீக்கம் 5.3% ஆகவும், 2022-23 நிதியாண்டில் 4.5% ஆகவும் உள்ளது என்று கூறியவர், உலகின் பிற பகுதிகளிலிருந்து இந்தியா வேறுபட்ட மீட்சியின் போக்கை பட்டியலிடுகிறது. சர்வதேச நாணய நிதியத் தின் கணிப்புகளின்படி, பெரிய பொருளாதாரங்களில் இந்தியா ஆண்டுக்கு ஆண்டு வேகமாக வளர்ச்சியடைகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2022-23-ல் 7.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5% இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது என்றும் பெரிய அளவிலான தடுப்பூசி மற்றும் நிலையான நிதி மற்றும் பண உதவியால் இந்த மீட்பு ஏற்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
9வது முறையாக ரெப்போ வட்டி மாற்றமில்லாமல் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.