சென்னை:

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், ஜல்லிக்கட்டை பாராட்டிவிட்டு, அதற்கு தேவையான சட்ட நடவடிக்கையை எடுக்க மறுத்துவிட்டார் பிரதமர் மோடி.
அவரது இந்த அறிவிப்பு தமிழக இளைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை தங்களின் போராட்டம் ஓயாது என இளைஞர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்தபின், மோடி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், அதேநேரத்தில் வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளதால், எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

மோடியின் இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக தமிழகமே ஸ்தம்பித்து உள்ள நிலையில், மோடியின் இந்த அறிவிப்பு எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியதுபோல மேலும் தீவிரமடைந்து வருகிறது.
இந்த ஆண்டு கட்டாயம் ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்ற கோரிக்கையுடன் சிறு தீக்குச்சியாக தொடங்கிய இந்த போராட்டம் தற்போது தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் விடிய விடிய இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகள், திரையுலகினர், அரசியல் கட்சியினர், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர் சங்கங்கள், லாரி உரிமையாளர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள் ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில் இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டம் தகதகவென எரிந்துகொண்டு இருக்கிறது.

இதனிடையே இன்றைய மோடியின் அறிவிப்பு காரணமாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பிரதமரின் அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டம் ஓயாது என்று கூறியுள்ளனர்.