காத்மாண்டு:
புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று நேபாளம் செல்கிறார்.

புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க, நேபாளம் வருமாறு பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் ஷேர்பகதூர் தேவுபா அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி இன்று நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளாா்.

அங்கு புத்த ஜெயந்தி விழாவில் பங்கேற்கும் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவையும் சந்தித்து பேசுகிறார். லும்பினி வளர்ச்சி அறக்கட்டளை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் உரையாற்றுகிறாா். புத்த மத கலாச்சார பாரம்பரிய மையத்திற்கு, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறாா்.

இந்த பயணம் குறித்து கூறியுள்ள பிரதமர், நேபாளத்துடனான இந்தியாவின் நட்புறவு ஈடு இணையற்றது என்றும் இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்காக நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நேபாளத்துக்கு பயணம் செய்வதை அடுத்து, இந்திய நேபாள எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளம் செல்லும் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமராக பதவியேற்று ஐந்தாவது முறையாக நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.