சென்னை: திருக்குறள் சொல்லும் பிரதமருக்கு செத்தமொழியான சமஸ்கிருதம்  இனிக்கிறது என திமுக இளைஞர் அணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையை மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள்ளது. இப்படிப்பிற்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ் மொழி இடம் பெறவில்லை.  மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதையடுத்து, செம்மொழியான தமிழ் மொழி படித்தோருக்கு வாய்ப்பை மறுப்பதா என மத்திய அரசுக்கு எதிராக கண்டங்கள் எழுந்து வருகின்றன. “மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது” என்று மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையை நோக்கி சென்று வருவதாகவும், ஹிந்தி, சமஸ்கிருத மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றசட்டுகள் எழுந்து வரும் நிலையில், மத்திய தொல்லியல் துறையின் இந்த தமிழ் புறக்கணிப்பு விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டில்,
கீழடி-ஆதிச்சநல்லூர் கொண்ட செம்மொழி தமிழை படித்தவர்கள் மத்திய அரசின் முதுநிலை தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க முடியாது. மியூசியத்திலும் இல்லாத சமஸ்கிருதம் படித்தவர்களுக்கு முன்னுரிமையாம். திருக்குறள் சொல்லும் பிரதமர். ஆனால் அவர் அரசுக்கோ செந்தமிழ் கசக்கிறது. செத்தமொழி இனிக்கிறது என்று காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.