சென்னை:
இரண்டுநாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள ஜனாதிபதி நேற்று குன்னூரில் நடைபெற்ற ராணுவ விழாவில் கலந்துகொண்டுவிட்டு மாலை சென்னை வந்தடைந்தார்.
டில்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் சென்றார். குன்னூரில் நடைபெற்ற ராணுவ விழாவில் கலந்துகொண்டு விட்டு அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார்.
சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதியை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தலைமை செயலாளர், மாநில அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, மாபா பாண்டியராஜன், சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் முப்படை அதிகாரிகள், டி.ஜி.பி., கமிஷனர், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜே.எம்.ஆரூண், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்த் குமார் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
இரவில் கவர்னர் மாளிகையில் தங்கிய அவர் , இன்று காலை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில்ரா, ணுவ பயிற்சி முடித்து பணிக்கு செல்லும் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.
அதையடுத்து, மதியம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் வங்கி விழாவில் கலந்துகொண்டு, விழா முடிந்ததும் டெல்லி புறப்படுகிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.