சென்னை:

‘பெசன்ட்நகர் கடற்கரையில், பிறந்தநாள் கொண்டாடிய இளைஞகள் அந்த பகுதியில் குப்பையாக்கி சென்றனர். அவரை அழைத்துவந்து, குப்பையை சுத்தம் செய்ய வைத்து நூதன முறையில் தண்டனை வழங்கினார் பெசன்ட்நகர் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர் கிறிஸ்டோபர்.

காவலர் கிறிஸ்டோபரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இன்றைய இளைஞர்களுக்கு பொதுஇடங்களில் பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கமாகி வரு கிறது. பொதுஇடங்களில், பூங்காக்கள், கடற்கரை போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

இதுபோன்று சென்னை  பெசன்ட் நகர் கடற்கரையிலும்  கல்லூரி மாணவர்கள் சிலர் சேர்ந்து ஒருவருக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார். இதையடுத்து, அந்த இடம் குப்பை கூளமானது. பிறந்தநாள் கொண்டாடியவர்கள், குப்பைகளை அகற்றாமல் சென்றுவிட்டனர்.

ரோந்துபணிக்கு சென்ற  காவலர் கிறிஸ்டோபர், இதுகுறித்து சிசிடிவி கேமிராவில் ஆய்வு செய்தார். அப்போது, சிலர் அங்கு பிறந்தநாள் கொண்டாடியது தெரிய வந்தது.  அவர்கள் வாங்கிய கேக் அட்டை பெட்டியில்   இருந்த பேக்கரி எண்ணில் தொடர்பு கொண்டபோது, இளைஞர் ஒருவர் கேக்குகள் வாங்கிச் சென்றதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து,  தொலைபேசி எண்ணை கிறிஸ்டோபர் தொடர்புகொண்டபோது, தனக்கு தொடர்பு இல்லை என கேக் வாங்கிய இளைஞர் மறுத்துள்ளார். சிசிடிவி ஆதாரம் இருப்பதாகக் கூறி அந்த இளைஞரையும், அவருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய கல்லூரி நண்பர்களையும் கடற்கரைக்கு வரவழைத்தார் கிறிஸ்டோபர்.

துடைப்பம் உள்ளிட்ட பொருட்களை அவர்களிடம் கொடுத்து குப்பை போட்ட இடத்தை சுத்தம் செய்துவிட்டு செல்லுமாறு கூறிய அவர், இதனை தண்டனையாகக் கருதக் கூடாது எனக் கூறி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என அறிவுரை வழங்கினார்.

இதையடுத்து, அந்த இளைஞர்கள் அந்த பகுதியை சுத்தம் செய்துவிட்டு, தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த   காவல் துணை ஆணையர் செஷாங்க் சாய், ஆய்வாளர் உள்ளிட்டோர் காவலர் கிறிஸ்டோபரின் செயலுக்கு பாராட்டுத் தெரிவித்தனர். கிறிஸ்டோபரின் செயலுக்கு  பெசன்ட்நகர் நகர் கடற்கரைவாசிகளும் மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்தனர்.