ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றி பத்து நாட்கள் ஆன நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறியிருக்கிறது.

தாலிபான்களின் ஆட்சியில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கானோர் எந்தவித கடவுச்சீட்டு கேள்வியும் இல்லாமல் ஆப்கானை விட்டு வெளியேற, விமான சக்கரங்களில் சிக்கியும், விமானங்களில் தொங்கியபடி பயணம் செய்தும் பலர் உயிரிழந்த நிகழ்வுகள் அரங்கேறியது.

 

இதனைத் தொடர்ந்து தாலிபான்களின் உதவியுடன் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோரை காபூலில் இருந்து மீட்டுக்கொண்டு வரும் நிலையில், வரும் 31 ம் தேதியுடன் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகளுக்கு மீட்புப் பணிக்கான காலக்கெடு முடிவடைகிறது.

அதற்குப் பின் மீட்பு முயற்சிகளில் இறங்கினால் பின்விளைவுகள் ஏற்படும் என்று தாலிபான்கள் கூறிவருகின்றனர். இருந்தபோதும் இதுவரை உலகநாடுகள் தாலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் ஆப்கனுடனான வர்த்தகம் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை நிறுத்துவைத்துள்ளது.

இதன்காரணமாக ஆப்கான் வங்கிகள் பணமில்லாமல் முடங்கிப் போயுள்ளன, ஆப்கன் மத்திய ரிசர்வ் வங்கியின் பொறுப்பை கவனிக்கும் தாலிபான்கள் இதனால் விழிபிதுங்கி உள்ளனர். வெளிநாடுகளுக்குச் செல்லும் யாரும் அமெரிக்க டாலர்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று தாலிபான்கள் தடை விதித்திருக்கின்றனர்.

மேலும், நாட்டில் உள்ள அனைத்து ஏ.டி.எம்.களும் பணமில்லாமல் காலியாக உள்ளதால் இங்கு வாழும் நான்கு கோடி மக்களும் பரிதாப நிலைக்கு தள்ளப்பாட்டிருக்கிறார்கள்.

அரசு மற்றும் இதர வேலை செய்வோர் பலருக்கும் இந்த மாத சம்பளமும் வரவில்லை என்ற நிலையில், வங்கியில் இருக்கும் சேமிப்பை எடுக்கவும் வழியில்லாமல் உள்ளனர்.

ஆட்சி மாற்றம் மற்றும் நிலையற்ற ஆட்சியின் காரணமாக பொருட்களின் விலையும் கடந்த ஒரு வாரத்தில் குறைந்தது 20 சதவீதம் உயர்ந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து தங்களின் உறவுகள் மூலம் வந்து சேறும் உதவித் தொகையும் வருவதற்கு வழியில்லாததால், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வேலைக்காக நகரங்களில் குடியேறிய மக்கள் பலரும் வீதியில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சொந்த மண்ணில் அனாதைகளாக வாழும் இந்த பரிதாப நிலைக்கு ஆளாகி இருக்கும் இந்த சாமானிய மக்கள் தங்கள் நாட்டின் நிலைமை எப்போது சீராகும் என்ற கவலையுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.