இலங்கையின் பொருளாதார மீட்பு என்பது எச்சரிக்கையுடன் நகர்வதன் மூலம் மட்டும் சாத்தியமாகாது. துணிச்சலான, நீண்டகால வளர்ச்சியை உருவாக்கும் பெரிய முடிவுகளை எடுப்பதில்தான் உண்மையான மீட்பு உள்ளது.
அந்த வகையில், இந்தியா முன்மொழிந்துள்ள பால்க் நீரிணை பாலம் (Palk Strait Bridge) இலங்கையின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தக்கூடிய முக்கியமான திட்டமாகும் என்று இலங்கை அரசில் தூதராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கணநாதன் தெரிவித்துள்ளார்.

கணநாதன், ஆப்பிரிக்காவில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், கென்யாவுக்கான இலங்கை தூதராகவும், 22 ஆப்ரிக்க நாடுகளுக்கான இணை தூதராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இதுகுறித்து டெய்லி மிர்ரர் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் :
இலங்கை தனது வரலாற்றிலேயே மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது, முதலில் உதவிக்கரம் நீட்டிய நாடு இந்தியா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எரிபொருள், உணவு, மருந்துகள், கடன் உதவி, நாணய ஆதரவு மற்றும் சர்வதேச அளவில் தூதரக ஆதரவு ஆகியவற்றை இந்தியா உடனடியாக வழங்கியது.
“இலங்கை பொருளாதாரம் ஐ.சி.யூவில் இருந்தபோது இந்தியா உதவியது. அந்த உதவிதான் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பு பாதைக்கு கொண்டு வந்தது,” என கணநாதன் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் கூட, 440 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மறுசீரமைப்பு மற்றும் நிவாரண உதவியை இந்தியா வழங்கியுள்ளது. இது இந்தியாவின் நீடித்த உறுதிப்பாட்டை காட்டுகிறது.
பால்க் நீரிணை பாலத்தை, சாதாரண உதவித் திட்டமாகப் பார்க்கக் கூடாது. இது இலங்கை பொருளாதாரத்தை பல மடங்கு வளரச்செய்யும் ஒரு முக்கிய முதலீடு என்று அவர் கூறுகிறார்.
தற்போது இலங்கை – இந்தியா வர்த்தகம் கடல் மற்றும் விமான வழியாக நடைபெறுகிறது. இதனால் நேரம், செலவு மற்றும் சிக்கல்கள் அதிகமாகின்றன.
பாலம் அமைந்தால் – போக்குவரத்து செலவு குறையும், சரக்கு விநியோக நேரம் வேகமாகும், இலங்கை உற்பத்தியாளர்கள் நேரடியாக இந்திய சந்தையுடன் இணைவார்கள் வர்த்தகம் பல மடங்கு உயரும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியா மட்டும் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மிகப்பெரிய சந்தை. இந்த பாலம் அமைந்தால், இலங்கையின் வேளாண் பொருட்கள், மீன் மற்றும் கடல் உணவுகள், மருந்துகள், தொழிற்சாலை உற்பத்திகள், சேவைத் துறை அனைத்தும் மிகக் குறைந்த செலவில், வேகமாக இந்திய சந்தையை அடைய முடியும்.
“வர்த்தகம் சிறிது சிறிதாக வளராது; அது பல மடங்கு உயரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சுற்றுலா துறை தான் இந்த பாலத்தின் மிகப்பெரிய பலன் தரும் துறை.
இந்தியா ஏற்கனவே இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் முதலிடத்தில் உள்ளது.
பாலம் அமைந்தால, வார இறுதி சுற்றுலா, மத யாத்திரை, மருத்துவ சுற்றுலா, குடும்ப சுற்றுலா, கல்வி மற்றும் நலவாழ்வு சுற்றுலா போன்றவை வேகமாக அதிகரிப்பதோடு சுற்றுலாத்துறை இரட்டிப்பு வளர்ச்சி என்பதைக் காட்டிலும் பல மடங்கு உயரும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் நிறைவேறினால் வடக்கு இலங்கை நுழைவாயிலாக அமையும் இதனால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அதிக பயன் அடையும் என்றும் உள்ளூர் வியாபாரிகள் முதல் ஹோட்டல்கள் வரை அனைத்து துறைகளும் வளர்ச்சிபெறும் என்று தெரிவித்துள்ளார்.
நெருக்கடியில் இருந்து மீண்டு வளர்ந்த நாடுகள், பெரிய சந்தைகளுடன் இணைய இலங்கை இந்த திட்டத்தை ஆதரிப்பதே புத்திசாலித்தனம் என்று அந்த கட்டுரையில் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]