மதுரை,
போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் ரூ.204 கோடியை 11-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய பண பலன்கள், நிலுவைத் தொகை உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தடை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற வேலைநிறுத்தத்தின்போது அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் ஒப்புக்கொண்ட படி கோரிக்கைகளை நிறைவேற்றாததால் மீண்டும் டிசம்பரில் போராட்டத்தில் குதித்தனர். அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணம் காட்டி, பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தின்போது, பேருந்துகள் இயக்கப்படாததால், அதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்த மதுரை ஐகோர்ட்டு, போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்குக்கு இடைக்கால தடை விதித்து.
இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் அவல நிலையை குறிப்பிட்டு, சென்னை ஐகோர்ட்டுக்கு, மதுரை செக்காணூரணியை சேர்ந்த மாயாண்டி சேர்வை என்ற ஓய்வு பெற்ற டிரைவர் கடிதம் எழுதினார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், கடிதத்தின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். பின்னர், இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் விசாரித்து வந்தனர்.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்பேழ, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய உள்ளிட்ட பண பலன்கள் தொகையில், முதல் தவணையாக ரூ.379 கோடியை 2017-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டனர்.
ஆனால், அந்த தொகையை தமிழக அரசு வழங்கவில்லை. இதையடுத்து முதல் தவணை தொகையில், ரூ.175 கோடியை ஜனவரி 3-ந் தேதிக்குள் (நேற்றுக்குள்) வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ஊழியர்களுக்கு ரூ.175 கோடி வழங்குவது குறித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து அரசாணையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘ ரூ.379 கோடியில் இருந்து முதல் தவணை தொகையான ரூ.175 கோடியை தமிழக அரசு ஒதுக்கி ஆணை பிறப்பித்து உள்ளது என்றும், மீதி தொகை யான ரூ.204 கோடியை வரும 11-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.