சென்னை,
வங்கக்கடலில் உருவான ஓகி புயல் குமரி மாவட்டத்தைப் புரட்டிப்போட்டுள்ளது. இதுவரை புயல் மற்றும் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்பட 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து அனைத்து ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-நாகர்கோவில், பயணிகள் ரயில் உள்பட 8 ரயில்கள் இன்று முழுக்க ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை 6 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பேரிடர் மீட்புக்குழு கன்னியாகுமரி சென்றுள்ளது. அமைச்சர் உதயகுமார் மீட்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான, ‘ஒகி’ புயல், தற்போது லட்சத்தீவை நோக்கி நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து புயலாக வலுப்பெற்ற ஓகி புயல், அரபிக் கடலுக்குள் நகர்ந்து, தற்போது வடமேற்கு திசையில் லட்சத்தீவை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக கன்னியாகுமரியில் மழை பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.