சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 28.71 கோடியாக உயர்ந்து இருக்கிறது என சுற்றுலாத்துறை அமைச்சர்  அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  திராவிட மாடல் அரசு அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துவதற்கான திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. பல சாதனைகளையும் படைத்து வருகின்றது. அந்தவகையில் சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரை இந்த அரசு பொறுப்பேற்ற நாள்முதல் புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு 43 ஆயிரத்து 283-க்கும் மேற்பட்ட பழமையான கோவில்களையும், 1,076 கி.மீ. நீளமுள்ள நீண்ட கடற்கரை, 18 வனவிலங்கு சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் சரணாலயங்கள், 5 புலிகள் காப்பகங்கள், யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 6 தலங்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை தன்னகத்தே கொண்டு சிறப்பாக விளங்கி வருகிறது.

தமிழ்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது.

தமிழ்நாடு சுற்றுலா கொள்கை- 2023-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அடுத்த 5 ஆண்டுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்களிப்பை 12 சதவீதமாக உயர்த்துதல், தமிழகத்தில் சுற்றுலா மற்றும் அதனை சார்ந்துள்ள தொழில்களில் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் என்ற குறிக்கோள்களை சுற்றுலா கொள்கை கொண்டுள்ளது.

அதன் மூலம் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துதல், சுற்றுலா வளர்ச்சி மாநாடுகளை நடத்துதல் – பங்கேற்றல், முதலீடுகளை ஈர்த்தல், கலைத் திருவிழாக்களை நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள்தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பெருந்தொற்றினால் உலகளவில் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த வீழ்ச்சியில் இருந்து மீள கடுமையான முயற்சிகளை உலக நாடுகள் எடுத்துக்கொண்டிருக்கும் சூழலில், முதலமைச்சரின் கவனம் மிக்க செயல்பாடுகளால் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்று வருகிறது.

2020-ம் ஆண்டு 14.18 கோடியாக இருந்த சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கையை 2023-ம் ஆண்டில் 28.71 கோடியாக உயர்த்தி திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளது.

மேலும் பல கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்கீழ் தமிழ்நாடு சுற்றுலாத்துறை பல்வேறு பன்னாட்டு, தேசிய விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

இவ்வாறு கூறியுள்ளார்.

..