சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டது.

தினமும் 80,000க்கும் அதிகமானோர் 18ம் படியேறி சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் புக்கிங் மற்றும் ஸ்பாட் புக்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநில பக்தர்கள் பெரும்பாலும் ஆன்லைன் புக்கிங் செய்து சபரிமலை செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் தரிசனத்திற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டபோது, ​​ஐந்து வரிசைகளில் மட்டுமே பக்தர்கள் இருந்தனர். அதிகாலை 5 மணிக்கு பிறகு தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்காமல் நேரடியாக சென்று தரிசனம் செய்தனர்.

மாலை தீபாராதனைக்குப் பிறகும் பக்தர்கள் வருகை அதிகரிக்கவில்லை. பிரசாத கவுண்டர்கள் முன்பும் கூட்ட நெரிசல் இல்லை. நேற்று இரவு 9 மணியளவில் 18ம் படி ஏறிய பக்தர்கள் எண்ணிக்கை 500க்கும் குறைவாகவே இருந்தது.

நேற்று மட்டும் 63,242 பேர் 18வது படியில் ஏறி தரிசனம் செய்தனர். இதில் 10,124 பேர் ஸ்பாட் புக்கிங் மூலம் வந்துள்ளனர்.

அதேவேளையில், ஆன்லைனில் புக்கிங் செய்தவர்களில் தினமும் 10 முதல் 15,000 பேர் வரை வராமல் இருக்கின்றனர்.

ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் வர முடியாத பட்சத்தில், அதை ரத்து செய்ய, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. ஆனாலும், ஏராளமானோர் அதை ரத்து செய்வதாக தெரியவில்லை.

இது வேண்டுமென்றே திட்டமிட்டு யாராவது செய்கின்றனரா என்ற சந்தேகம் ஏற்படுவதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

இதனால் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை கூட்டும் எண்ணம் தேவசம் போர்டுக்கு இல்லை என்றும் தேவைப்படுபவர்களுக்கு பம்பையில் ஸ்பாட் புக்கிங்கில் அனுமதி வழங்கப்படும் என்றும் அதற்காக பம்பையில் ஸ்பாட் புக்கிங் கூடுதல் கவுன்டர் திறக்கப்படும் என்றும் தேவசம் போர்டு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.