பாமக தலைவர் யார் என்பதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே அறிக்கைப் போர் தீவிரமாகியுள்ள நிலையில் தற்போது அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அன்புமணிக்கு ஆதரவாக அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா கருத்து கூறிய நிலையில் ராமதாசுக்கு ஆதரவாக களமிறங்கிய பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், திலகபாமா-வை அரைவேக்காடு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரியில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டதில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே மோதல் வெடித்தது.
கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்த இந்த நியமனத்தை மேடையிலேயே விமர்சனம் செய்த அன்புமணி தான் இனி தனியாக செயல்படப் போவதாக அறிவித்தார்.
இதையடுத்து ஜி.கே. மணி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டனர்.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்து தங்கள் கட்சியை வளப்படுத்திக் கொள்வது என்ற கேள்வி எழுந்த நிலையில் ஆளுக்கொரு திசையைக் காட்டி வளம் சேர்க்க நினைத்ததை அடுத்து அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மீண்டும் ஊடல் ஏற்பட்டது.
இதையடுத்து கட்சியின் நிறுவனரான தானே கட்சியின் தலைவர் என்று ராமதாஸ் கடந்த வாரம் திடீரென அறிவித்ததுடன், தற்போது தலைவராக உள்ள அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என்றும் அறிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த அன்புமணி தேர்தல் ஆணையத்தில் தனது பெயரே கட்சியின் தலைவர் என்று இடம்பெற்றுள்ளதால் கட்சியின் தலைவராக தான் நீடிப்பதாகக் கூறினார்.
இதனால் பாமக உடன் கூட்டணி வைக்க துடிக்கும் கட்சிகள் இடையே இவர்கள் இருவருக்கும் இடையே யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதுடன் யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்சியின் பொருளாளர் திலகபாமா, “அன்புமணியை நீக்கியது தவறு” என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலபாமாவை தனிப்பட்ட முறையில் வசைபாடியுள்ளதுடன் ராமதாசுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.
இதனால் கட்சியின் வாக்குப்பெட்டி இரண்டாக பிரியும் என்றும் அன்புமணியும் ராமதாசும் ஆளுக்கொரு பக்கம் கட்சி உறுப்பினர்களின் வாக்குப்பெட்டிகளை வைத்து கூட்டணி கணக்கு போடுவார்கள் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அதேவேளையில் கட்சியில் ஏற்பட்டிருக்கும் இந்த மோதல் போக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.