சென்னை:
புதிய ரூ.200 ,ரூ.50 நோட்டுகள் சென்னையில் இன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும், அது ரிசர்வ் வங்கியில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் புதிதாக வெளியிடப்பட்ட ரூ.200 மற்றும் ரூ.50 நோட்டுகள் சென்னை வந்தன. சென்னை யில் உள்ள ரிசர்வ் வங்கியில் இன்று முதல் புதிய ரூ.200 மற்றும் ரூ.50 நோட்டுகள் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நோட்டுக்கள் ஏடிஎம் மூலம் பெறும் வகையில் ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது இருப்பதால், பிற வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள் கிடைக்க தாமதமாகும் என்றும் ரிசர்வ் வாங்கி தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட உள்ள 200 ரூபாய் நோட்டு பிரகாசமான மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டு இருக்கிறது. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கையெழுத்துடன். நோட்டின் முன்பக்கத்தில் நடுவே மகாத்மா காந்தி படம் இடம் பெற்று உள்ளது. இடது புறத்தில் ரூ. 200 என்ற எண் தேவநாகரி எழுத்தில் இருக்கிறது.
வலது புறத்தில் அசோக சின்னமும், ‘எச்’ என்ற எழுத்தும், 200 என்ற எண் பச்சை மற்றும் நீல நிறத்தில் மாறும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது.
நோட்டின் வலது மற்றும் இடது புறத்தில் 4 கோடுகளும் அதன் நடுவில் 2 சிறிய வட்டங்களும் உள்ளன. பார்வை குறைபாடு உள்ளவர்களும் எளிதாக இந்த நோட்டுகளை அடையாளம் காணும் வகையில் மகாத்மா காந்தி படம், ‘எச்’ எழுத்து, அசோக சின்னம் ஆகியவை சற்று மேல் எழும்பியவாறு இடம் பெற்று இருக்கின்றன.
நோட்டின் பின்பக்கத்தில் சாஞ்சி ஸ்தூபி படம் உள்ளது. மேலும் தூய்மை இந்தியா இலச்சினை மற்றும் வாசகமும், தமிழ் உள்பட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் 200 ரூபாய் என்ற எழுத்தும் இடம் பெற்று இருக்கிறது.