சென்னை: அரசு சார்பில் 10 கல்லூரிகள் – புதிய ரேசன் கடைகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் கூறினர்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்குக்கு முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்கள் பதில் கூறினர்.
கேள்வி நேரத்தின்போது சீ.கதிரவன் எம்.எல்.ஏ, மண்ணச்சநல்லூர் தொகுதி, கண்ணனூர் பேரூராட்சியில் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி துவக்க அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர், உறுப்பினரின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், அரசு சார்பில் 10 கல்லூரிகள், அறநிலைய துறை சார்பில் 10 கல்லூரிகள், கூட்டுறவு துறை சார்பில் ஒரு கல்லூரி துவங்கப்பட உள்ளன என கூறினார்.
பெரம்பூர் தொகுதியில் பழுதடைந்துள்ள குடியிருப்புகளை அகற்றி புதிய குடியிருப்புகள் கட்டப்படுமா? திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெரம்பூர் தொகுதியில் புதிய குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
திருப்பூரில் நியாயவிலைக் கடைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? என செல்வராஜ் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் கூறிய அமைச்சர் ஐ.பெரியசாமி, திருப்பூரில் 30 நியாய விலை கடைகள் இயங்கி வருகின்றன என்றும். திருப்பூரில் 3 முழு நேர கடைகள், 7 பகுதிநேர கடைகள் திமுக ஆட்சியமைத்த பின் தொடங்கப்பட்டு இருப்பதாகவும், . அதிக குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளை பிரித்து புதிய ரேஷன் கடைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
பூம்புகார் தொகுதி உப்பனாற்றின் குறுக்கே அணை கட்டப்படுமா? என எம்.எல்.ஏ முருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ரூ. 9.73 கோடி செலவில் உப்பனாற்றின் குறுக்கே அணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பதில் கூறினார்.