தமிழனை தலை நிமிர வைத்த கணிதமேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் 130வது பிறந்த நாள் இன்று
1887ம் ஆண்டு டிசம்பர் 22ந்தேதி இந்த உலகத்தை எட்டிப்பார்த்த சீனிவாச இராமானுஜன் பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழனின் புகழை உலகுக்கு உயர்த்திய உன்ன மேதையான சீனிவாச இராமானுஜன் இந்த உலகத்தில் 33 வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தார். ஆனால், அவரது கணிததத்தின் மீதான அறிவின் முதிர்ச்சி காலத்தால் அழிக்க முடியாத வரலாறு ஆகும்.
சீனிவாச இராமானுஜன் அவர்கள் 1887ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் நாள் ஈரோட்டில், சீனிவாச அய்யங்கார் கோமளத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாய்ப் பிறந்தவர். 33 ஆண்டுகளே வாழ்ந்த போதிலும், தனது கணிதத் திறமையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியவர்.
சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மீதான ஆர்வம் காரணமாக அதில் உள்ள உண்மைகளை கண்டறிந்ததார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடு களிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இராமானுஜன் தன் குறுகிய வாழ்க்கைக் காலத்திலேயே 3900 க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தவர்.
மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ராமானுஜனின் தந்தை ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த தாகவும், தாயார் பஜனைப் பாடல்களைப் பாடுவதன் வாயிலாக கிடைத்த சொற்ப ஊதியங்களிலேயே காலத்தை ஓட்டியவர்.
பல நாட்கள் உண்ண உணவின்றித் தண்ணீரை மட்டுமே குடித்து வளர்ந்தவர் ராமானுஜன். ஒரு நாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னசாமி அம்மா எப்படியும் மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து வைக்கிறேன் இரவு சாப்பிடலாம். அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினாள்.
இராமானஜனோ மறு வார்த்தை பேசாமல் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு. அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று கூறி பள்ளிக்குச் சென்று விட்டான். ஆனால் அன்று மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்ப வில்லை, கவலையில் கண்ணீர் விழிகளுடன் கோமளத்தம்மாள் இராமானுஜனைத் தேட ஆரம்பித்தாள், எங்கு தேடியும் காணவில்லை. அச்சமயம் இராமானுஜனின் நண்பன் அனந்தராமனின் தாயார் அங்கு வந்து விசாரிக்க, இராமானுஜனைக் காணவில்லை எனக் கூறி, தன் மகன் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை, மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறி அழத் தொடங்கினாள்.
கோமளத்தம்மாளை சமாதானம் கூறி வீட்டில் அமரவைத்து விட்டுத் தானும்,அனந்தராமனும் ஆளுக்கொரு பக்கமாக இராமானஜனைத் தேடத் தொடங்கினர். அனந்தராமன் பல இடங்களில் தேடி அலைந்தான். எங்கும் இராமானுஜனைக் காணவில்லை, திடீரென்று அனந்தராமனுக்கு ஒரு சந்தேகம்.
ஒரு வேளை சாரங்கபாணிக் கோயிலுக்குச் சென்றிருப்பானோ? என்று. உடனடியாக கோயிலுக்குச் சென்று தேடினான், கோயிலின் ஒரு மண்டபத்தில் கணக்குப் புத்தகங்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு இராமானுஜன் தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் படுத்திருந்த தரை முழுவதும் சாக்கட்டி யால் கணக்குகள் போடப்பட்டிருந்தன, அனந்த ராமன் அவனைத் தட்டி எழுப்பினான், திடுக்கிட்டு எழுந்த ராமானுஜன், என்ன அனந்தராமா அதற்குள் எழுப்பிவிட்டாயே, நேற்று நமது கணக்கு வாத்தியாருக்கே விடை கண்டுபிடிக்கத் தெரியாத. அந்தக் கணக்கை நான் மனதிலேயே போட்டுப் பார்த்தேன். போட்டு முடிப்பதற்குள் எழுப்பி விட்டாயே, என்றவன், இரு கனவில் நான் போட்ட பாதிக் கணக்கையாவது இந்த நோட்டில் எழுதி வைத்துவிட்டு வருகின்றேன் என்று கூறி எழுதத் தொடங்கினான்.
எழுதி முடித்தவுடன் அனந்தராமன், ராமானுஜனைத் தன்வீட்டிற்கே அழைத்துச் சென்றான், ராமானுஜனைக் காணாமல் அனந்தராமனும் சாப்பிடாமல் இருக்கின்றான் என்ற செய்தியைக் கூறி, அனந்தராமனின் தாயார் தன் வீட்டிலேயே ராமானுஜனுக்கும் உணவிட்டாள்.
இராமானுஜன் கணிதத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதால் கும்பகோணம் அரசு கல்லூரியிலும், தொடர்ந்து சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் கணிதத்தைத் தவிர மற்ற பாடங்களில் தோல்வியையே சந்தித்தார்.
1910 ம் ஆண்டு இறுதியில் இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளர் ராமச்சந்திர ராவ் அவர்களை ராமானுஜன் சந்தித்தார். ராமானுஜனின் கணிதத் திறமையினைக் கண்டு வியந்த ராமச்சந்திரராவ் அவர்கள்ரா ராமானுஜனைப் பார்த்து தற்சமயம் உமது தேவை என்ன? என்று கேட்க, ராமானுஜன் ஓய்வு தேவை என்று பதிலளித்தார், அதாவது உணவு பற்றிய கவலையின்றி கணிதம் பற்றிய கனவு கான ஓய்வு தேவை என்றார்.
யாருக்குமே விளங்காத கணக்குகள் எல்லாம் ராமானுஜனிடம் கைக்கட்டி சேவகம் செய்தாலும், உணவு மட்டுமே அவர் இருக்குமிடத்தை அனுகாதிருந்தது.
பிப்ரவரி 27 ல் ஹார்டிக்கு ராமானுஜன் எழுதிய கடிதம், படிப்போரை நெகிழச் செய்வதாகும்.
1913ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி, ராமானுஜன் இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி என்பாருக்கு ஒரு கடிதம் எழுதினார், தான் கண்டுபிடித்த தேற்றங்கள் சிலவற்றையும் இணைத்து அனுப்பினார்.
ராமானுஜனின் தேற்றங்களால் கவரப் பட்ட ஹார்டி, ராமானுஜனை இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வருமாறு அழைத்தார், பிப்ரவரி 27 இல் ஹார்டிக்கு இராமானுஜன் எழுதிய கடிதம், படிப்போரை நெகிழச் செய்வதாகும். நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக வைப்பதெல்லாம் ஒன்றுதான், நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன்.
எனது மூளையைப் பாதுகாக்க . எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவை யாகும் என்று எழுதினார், இராமானுஜனின் உண்மை நிலையை, வறுமையில் உழன்ற அவல நிலையை விளக்க இக்கடிதம் ஒன்றே போதுமானதாகும்.
இராமானுஜன் இளமைக் காலம் முதல் தான் கண்டுபிடித்த கணக்குகளை நான்கு நோட்டுகளில் பதிவு செய்துள்ளார். ஊதா நிற மையினால் கணக்குகளை தாளில் எழுதிவரும் இராமானுஜன், ஒரு பக்கம் முடிந்ததும், அடுத்த பக்கத்தில் எழுதாமல், அதே பக்கத்திலேயே, மேலிருந்து கீழாக, ஊதா நிற வரிகளுக்கு இடையே சிகப்பு நிற மையினால் எழுதுவார்.
நோட்டு வாங்கக் கூட காசில்லாத நிலையில் இராமானுஜன் இருந்தமைக்கு இந்த நோட்டுகளே சாட்சிகளாய் இருக்கின்றன.
ஐந்து வருடம் இலண்டனில் தங்கி உலகையேத் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமையுடன் தாயகம் திரும்பினார் இராமானுஜன். அவருடன் இரண்டறக் கலந்து காசநோயும் வந்தது. காச நோயால் பாதிக்கப் பட்டு எழும்பும் தோலுமே உள்ள உருவமாய் இளைத்த இராமானுஜன், அந்நிலையில் கூட தனது கணித ஆய்வை நிறுத்தவில்லை.
1920 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் ஹார்டிக்குத் தனது இறுதிக் கடிதத்தை எழுதினார். இந்தியாவிற்குத் திரும்பியபின் இதுநாள் வரை தங்களுக்குக் கடிதம் எழுதாததற்கு மன்னிக்கவும். நான் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சார்பினைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு மாக் தீட்டா சார்பு எனப் பெயரிட்டுள்ளேன். இக்கடிதத்துடன் சில சார்புகளை அனுப்பியுள்ளேன் என்று எழுதினார்,
தனது கடைசி மூச்சு உள்ளவரை கணிதத்தை மட்டுமே நேசித்த, சுவாசித்த மாபெரும் கணித மேதை சீனிவாச இராமானுஜன்.
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1946 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட Discovery Of India எனும் நூலில் இராமானுஜன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்,
இராமானுஜனின் குறுகிய கால வாழ்வும் மரணமும் இந்தியாவின் நிலையினைத் தெளிவாகக் காட்டுகிறது. கோடிக் கணக்காண இந்தியர்களுள் சிலருக்கே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. வறுமையின் பிடியில் சிக்கி உண்ண உணவின்றி, பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு உண்ண உணவும், கற்க கல்வி வசதியும் ஏற்படுத்தப் படுமேயானால், இந்தியாவில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இலட்சக் கணக்கில் தோன்றிப் புதிய பாரதத்தைப் படைப்பார்கள் என்பது உறுதி.
உணவிற்கே வழியின்றி வாழ்வில் வறுமையை மட்டுமே சந்தித்த போதும், கணிதத்தையே சிந்தித்து, சுவாசித்து, சாதித்துக் காட்டிய கணித மேதை சீனிவாச இராமானுஜனின் நினைவினைப் போற்றுவோம்.
கணிதமேதை ராமானுஜத்தின் 125 வது பிறந்த ஆண்டை தேசியக் கல்வி ஆண்டாக அறிவித்ததன் மூலம் பலரது எதிர்பார்ப்பை மைய அரசு பூர்த்தி செய்துள்ளது.
1887ல் பிறந்த ராமானுஜர் 1920ம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று தனது 33 வயதில் இயற்கை எய்தினார்.