2011ம் ஆண்டின் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில், விஜயகாந்தின் தேமுதிக, தான் போட்டியிட்ட 41 தொகுதிகளில், 29 தொகுதிகளைக் கைப்பற்றி, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்துடன் சட்டசபைக்குள் நுழைந்த காலகட்டத்தை, தேமுதிக-வின் உச்ச வளர்ச்சி காலகட்டமாகவே இன்றுவரை பலரும் பேசி வருகிறார்கள்.

ஆனால், விஜயகாந்த் மற்றும் அவரது கட்சியினுடைய லட்சியம் அல்லது ஆசை என்ற அடிப்படையில் பார்த்தால், அந்த 2011 காலகட்டம்தான், அவருடைய வீழ்ச்சி தொடங்கிய காலகட்டம் என்பதை பலரும் கணிக்கத் தவறுகின்றனர் என்றே கூறலாம்.

இந்த 29 சட்டமன்ற உறுப்பினர்களை, அவர் தனியாக நின்றோ அல்லது வேறுசில கட்சிகளை தன் தலைமையில் கூட்டணி சேர்த்தோ பெற்றிருந்தால், உண்மையில் அது மிகப்பெரிய வளர்ச்சி. கடந்த 1962ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக அடைந்த எழுச்சிக்கு சமமாக அது ஒப்பிடப்பட்டிருக்கும்.

விஜயகாந்தும், முதல்வர் நாற்காலியை நோக்கிய தனது விரைவான பயணத்தை, மெதுவாகவேனும் தொடர்ந்திருக்கலாம்.
ஆனால், இந்த இடத்தில் நடந்த பெரிய சொதப்பல் என்ன? அதற்கு காரணமான முக்கிய நபர் யார்? என்பதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையின் ஓட்டம் அமையப் போகிறது.

(விஜயகாந்திற்கு முதல்வராகும் வாய்ப்பு உண்மையிலேயே இருந்ததா? என்பதைப் பற்றி பேசுவதைவிட, அவரின் ஆசைகள் நிறைந்த பயணம், எப்படி பாதியிலேயே முடித்துவைக்கப்பட்டது என்பதை, விருப்பு-வெறுப்பற்ற ஒரு சாதாரண அரசியல் பார்வையிலிருந்து அலசுகிறது இக்கட்டுரை.)

திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மாற்று என்றுகூறி, முதலமைச்சர் கனவுடன் கட்சித் தொடங்கியவர்கள் விஜயகாந்த் குடும்பத்தினர் (இப்படி சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும்). அந்தக் கனவிலேயே 2006 சட்டமன்றம் மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்தார். முதல் தேர்தலில் அவர் வாங்கிய வாக்குகள் 8.5% மற்றும் இரண்டாவது தேர்தலில் 10.3%.

இதையே நாம் அவரின் உண்மையான ஆரம்பகால பலமாக எடுத்துக்கொள்வோம். அதுதான் சரியாக இருக்கும். இது அவருக்கு மட்டுமல்ல (அனைத்து தொகுதிகளிலும் கூட்டணியின்றி தனியாக நிற்பது), எந்தக் கட்சிக்கும் இந்தக் கணக்கீடுதான் சரியாக இருக்கும்.

விஜயகாந்த் தனியாக சந்தித்த இரண்டாவது தேர்தல், நாடாளுமன்றத்துக்கானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். விஜயகாந்த் போன்ற ஒரு மாநில அளவிலான தலைவருக்கு, அதுவும் ஆரம்ப காலங்களில், நாடாளுமன்ற தேர்தலில் பெரியளவில் ஓட்டுக்கள் வந்து குவியும் என்று எதிர்பார்த்துவிட முடியாது. அந்தவகையில், அவருக்கு 2006 சட்டமன்ற தேர்தலைவிட 2%க்கும் சற்று குறைவான வாக்குகளே கூடுதலாக கிடைத்தது.

அடுத்ததாக, விஜயகாந்துக்கான முக்கிய தேர்தலாக இருந்திருக்க வேண்டியது 2011 சட்டமன்ற தேர்தல். இங்குதான் நாம் முன்பு சொன்ன மிகப்பெரிய சொதப்பல், அதாவது, விஜயகாந்தின் முதல்வர் பதவி கனவுக்கு உலைவைத்த அந்த சொதப்பல் நிகழ்கிறது. அதற்கான காரணகர்த்தா?

அரசியல் ராஜதந்திரி என்றும், அறிவாளி என்றும் பெயர்பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன், தேமுதிக -வில் இணைந்து முக்கியத்துவம் பெற்று, அக்கட்சியின் அவைத் தலைவர் பதவியையும் அடைகிறார். இவர் ஒரு தீவிர கருணாநிதி எதிர்ப்பாளராக அறியப்படுபவர்.

அண்ணா மற்றும் கருணாநிதி அமைச்சரவையில் இருந்த கோவிந்தசாமி மறைந்தவுடன், அவருக்கு பதிலாக, ஒரு வன்னியர் பிரதிநிதியாக அமைச்சரவையில் நுழைந்தவர் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன் என்று கூறப்படுகிறது. ஜுனியர் என்றாலும், முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து துறையை இவருக்கு கொடுக்கிறார் கருணாநிதி. அப்பதவியை கடைசிவரை நன்றாக அனுபவித்துவிட்டு, அதிமுக -வில் போய் இணைந்துவிடுகிறார் இந்த முன்னாள் மின்சாரத்துறை பொறியாளர்.

எம்.ஜி.ஆரின் ஆட்சியில் கோலோச்சுகிறார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கையில், ஒடிசாவின் பிஜு பட்நாயக், தமிழகத்தின் இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த முயற்சி ஒருவகையில் சாத்தியமில்லை என்றாலும்கூட, அதை இடையில் புகுந்து கெடுத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான் என்று கூறப்படுவதுண்டு.

அதிமுக நிறுவனர் இறந்தவுடன், ஜெயலலிதாவை ஆதரிக்கிறார். ஆனால், அங்கும் ஒத்துவராமல் போக, வடமாவட்டங்களில், திமுக -வின் வன்னியர் வாக்கு வங்கியை அதிகமாக உடைத்துக்கொண்டு வெளிவந்த பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து முக்கியத்துவம் பெறுகிறார்.

1991 தேர்தலில் பாமக -வின் ஒரே உறுப்பினராக வெற்றிபெற்று, யானை ஊர்வலம் சென்ற போதிலும், அங்கேயும் பிணக்குதான். பிறகுதான், மக்கள் நல உரிமைக் கழகம் என்ற தனிக்கட்சி வாழ்க்கை. அதுவும் போனியாகாமல் முழித்துக் கொண்டிருந்த காலத்தில்தான், விஜயகாந்தின் தேமுதிக இவர் கண்களில் தென்படுகிறது.

திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே, தேமுதிக பிரித்த வாக்குகளால் பாதிக்கப்பட்டன என்று மதிப்பிடப்பட்டாலும், ஒரு கட்டத்தில் அதிமுக, விஜயகாந்தின் கட்சியைப் பார்த்து ரொம்பவே மிரண்டது. பொதுவாக, ராமாவரம் தோட்டத்தைக் கண்டுகொள்ளாத ஜெயலலிதா, அங்கே எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய நாளில் நேரடியாகச் சென்று, ‘நாங்கள்தான் புரட்சித் தலைவரின் உண்மையான வாரிசுகள்’ என்று வலியுறுத்தி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பயந்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

2009 நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்த ராமதாஸ் கட்சிக்கு மடைமாற்றப்பட வேண்டிய அதிமுக வாக்குகளை, கருப்பு எம்.ஜி.ஆர் என சொல்லிக்கொண்ட விஜயகாந்த், வடமாவட்டங்களில் தட்டிப் பறித்துவிட்டதாக கூறப்படுவதுண்டு. அந்தளவிற்கு அதிமுக -விற்கு பாதிப்பை ஏற்படுத்திய விஜயகாந்த், 2011 தேர்லை எப்படி சந்தித்திருக்க வேண்டும்?

ஆண்டாள் அழகர் மண்டப இடிப்பு என்ற காரணத்தால் திமுக சுத்தமாக ஆகாமல் போய்விட்டது என்று வைத்துக்கொண்டாலும், தான் சந்திக்கும் மூன்றாவது தேர்தல், அதுவும் சட்டமன்ற தேர்தல் எனும்போது, அவர் ஒரு கை பார்த்திருக்க வேண்டுமல்லவா! அந்த சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு சற்று முன்பாக நடந்த பெண்ணாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து பலவீனப்பட்டு போயிருந்தது அதிமுக. அதேசமயம், திமுக -வோ மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி என்று அனைத்து மட்டங்களிலும் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தது.

கருப்பு எம்.ஜி.ஆர் என்று அடைமொழி வைத்துக்கொண்டவர் மற்றும் ஜெயலலிதாவோடு கடுமையான வார்த்தைப் போர்களில் ஈடுபட்டவர், அந்த சட்டமன்ற தேர்தலில் என்ன செய்திருக்க வேண்டும்? இங்குதான் வருகிறார் அந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

“நான் இறந்தபின், வன்னியர் சார்பாக வேறு யாருக்கு வேண்டுமானாலும் அமைச்சர் பதவியை தாருங்கள். ஆனால், அந்த பண்ருட்டி ராமச்சந்திரனை மட்டும் உள்ளே சேர்த்துவிடாதீர்கள்” என்று மரணப் படுக்கையில் இருந்தபோது, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி, கருணாநிதியிடம் கூறிவிட்டு சென்றதாய் சொல்வார்கள். கருணாநிதியும்கூட பல சமயங்களில், ‘இந்த பண்ருட்டி ராமச்சந்திரன் பற்றி மறைந்த கோவிந்தசாமி என்ன சொன்னார் தெரியுமா?’ என்று சொல்ல நாம் கேட்டிருப்போம். அவர், பண்ருட்டி ராமச்சந்திரனை துரோகி என்றும் குறிப்பிடுவதுண்டு.

தனித்து நின்றோ அல்லது முயற்சிசெய்து சில கட்சிகளை தன் தலைமையில் கூட்டணி சேர வைத்தோ, சில பல இடங்களை வென்று, கட்சியின் வாக்கு சதவீதத்தையும் பெரியளவில் அதிகரித்து, தன் முதல்வர் கனவின் உயிரோட்டத்தை விஜயகாந்த் கூட்டியிருக்க வேண்டிய 2011 சட்டமன்ற தேர்தலில், வெறும் 41 இடங்களுக்கு, போயஸ் தோட்டத்தில் போய், விஜயகாந்தை அமரவைத்தவர் இந்த ராஜதந்திரி பண்ருட்டி ராமச்சந்திரன்! இது எந்தவகை ராஜதந்திரம்? என்று பண்ருட்டி ராமச்சந்திரன் புகழ்பாடுவோர்தான் கூறவேண்டும்.

தனக்கு ஆகாத கருணாநிதி, மீண்டும் வென்று முதலமைச்சர் ஆகிவிடக்கூடாது என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன், முதல்வர் கனவையே லட்சியமாகக் கொண்டு கட்சித் தொடங்கி, அதை நோக்கி மெதுவாகவேனும் பயணம் செய்துகொண்டிருந்த விஜயகாந்தின் வாகனத்தை மாபெரும் விபத்துக்குள்ளாக்கி விட்டார். ஆம். திரும்ப சரிசெய்து ஓட்டவே முடியாத மாபெரும் கோர விபத்து!

அத்தேர்தலில் ஜெயலலிதாவுடன், விஜயகாந்த் இணைந்ததற்கு, பண்ருட்டி ராமச்சந்திரன்தான் மிகப்பெரிய தூண்டுவிசை! அப்படியான கூட்டணிக்கு, விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்குமே உண்மையில் விருப்பமில்லை என்றே பல தகவல்கள் கூறின.

அதிமுக – தேமுதிக கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. அப்படியிருந்தும் அது வென்றதற்கு காரணம், அன்றைய நிலையில், ஊடகங்களால் திமுக -வின் மீது கட்டமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய எதிர்ப்புணர்வுதான் என்றே நாம் புரிந்து கொள்ளலாம். இன்னொரு முக்கிய காரணம், தன் ஓட்டைப் பிரித்த ஒருவரை தன்னுடனேயே வைத்துக்கொண்டுவிட்டார் ஜெயலலிதா.

தனியாக நின்றோ அல்லது தன் தலைமையில் கூட்டணி அமைத்தோ பிடிக்க வேண்டிய முதல்வர் பதவியை, ஒரு முக்கிய எதிரியுடன், போயும் போயும் 41 இடங்களுக்காக, அவரின் தலைமையில் இணைந்த பிறகு, எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?

அரசியலைப் பொறுத்தவரை, பெரிய பதவியைப் பிடிக்க வேண்டுமானால், அனைத்திலும் நாம்தான் தலைவராக இருக்க வேண்டுமேயொழிய, இன்னொருவரிடம் subordinate என்ற நிலையில் போய்சேர்ந்துவிடக் கூடாது. அப்படி ஒருதடவை சேர்ந்துவிட்டால்கூட, அவ்வளவுதான், அனைத்தும் முடிந்துவிடும்.

தனக்குப் போட்டியாக, முதல்வர் பதவி கோதாவில் குதித்த சி.சுப்பிரமணியம் மற்றும் தனக்கு அச்சுறுத்தலாக இருந்த பக்தவச்சலம் ஆகியோரை, தான் முதல்வர் பதவி ஏற்றதும், காலம் தாழ்த்தாமல் அவர்களை தனது அமைச்சரவையில் சேர்த்து, அவர்கள் இருவரையும் தன்னுடைய subordinates நிலையில் வைத்துவிட்டே மறுவேலை பார்த்தார் அரசியல் சாணக்கியர் காமராஜர். ஆனால், இதை காமராஜரின் பெருந்தன்மை என திரித்துக் கூறுவோர் பலர் உள்ளனர்.

செய்யக்கூடாத ஒரு பெருந்தவறை செய்துவிட்டப் பின்னர், 2016ம் ஆண்டில், வேறு வழியில்லாமல், ஒரு திட்டத்துடன், தன்னுடன் சேர்ந்த கட்சிகளை வைத்துக்கொண்டு முதல்வர் வேட்பாளராக நின்றால், வென்றுவிட முடியுமா என்ன?

விஜயகாந்தும் அவரின் குடும்பத்தினரும் செய்த, அதுவரை முன்னுதாரணம் இல்லாத சகிக்கமுடியாத கூட்டணி பேரங்கள், அவரின் உடல்நிலை மற்றும் உளறல்கள் போன்றவை காரணங்களின் வரிசையில் இருப்பினும், 2011ல், அதிமுக -வின் தலைமையில் அணிசேர்ந்தபோதே அனைத்தும் முடிந்துவிட்டது.

சில தவறுகள் எப்போதும் சரிசெய்யப்பட முடியாதவை. அதுவும் அரசியல் என்று வரும்போது, சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், ஒருமுறை வந்த நல்வாய்ப்பு, பின்னர் எப்படி தலைகீழாக நின்றாலும் மீண்டும் திரும்பவே திரும்பிடாத ஒரு துறை எதுவென்றால், அது கட்டாயம் அரசியலாக மட்டுமே இருக்கும்..!

முதல்வர் பதவியைப் பிடித்த திமுக மற்றும் அதிமுக கட்சிகள், தனித்தோ அல்லது தம் தலைமையில் பிறக் கட்சிகளை கூட்டணி சேர்த்தோதான் தேர்தலில் நின்றுள்ளன என்ற அடிப்படை பாடத்தைக்கூட அறியாத அறிவாளிகளாய்(!) இருக்கின்றனர் விஜயகாந்த் குடும்பத்தினர். பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியை விட்டு நீங்கியதால், விஜயகாந்திற்கு நஷ்டம் என்று கூறுவோர், அதே பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் இருந்ததால், விஜயகாந்திற்கு நிகழ்ந்த கதியைப் பற்றி சிந்திப்பதில்லை.

ராஜதந்திரி என்ற பெயரிலும், நம்பகமான ஆலோசகர் என்ற போர்வையிலும் இருந்துகொண்டு, தனது மனதில் இருந்த கருணாநிதியின் மீதான வன்மத்தை செயல்படுத்திக் கொள்வதற்காகவும், தனது இரட்டை இலை அபிமானத்தை மெய்பித்துக் கொள்வதற்காகவும், வேறொரு வழியில் பயணித்துக் கொண்டிருந்த விஜயகாந்தை, wrong turn எடுக்க வைத்த பண்ருட்டி ராமச்சந்திரன், பின்னாளில் தன்னால் காலிசெய்யப்பட்ட தேமுதிக -வை குறை சொல்லி, கடைசியில் ஜெயலலிதாவிடமே வந்து சேர்ந்தார்.

தேமுதிக இன்று இப்படியாக வீழ்ந்துபோய் கிடப்பதற்கு காரணம் விஜயகாந்தின் குடும்பத்தினரா? மட்டமான பேர அரசியலா? விஜயகாந்தின் உடல்நிலையா? என்றெல்லாம் விவாதம் செய்பவர்கள், இன்று ஆளரவம் தெரியாமல் ஒதுங்கியிருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனையும் சற்று களத்திற்குள் இழுத்துவிட்டால், அந்த விவாதங்களுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்? அதை செய்வார்களா?

கடந்த 1970 -களின் பிற்பாதியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய கருணாநிதி எதிர்ப்பு பயணம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ராமதாஸ், தனிக்கட்சி, தேமுதிக என்று நீண்டு, மீண்டும் ஜெயலலிதாவிடமே வந்துசேர்ந்து, இப்போது ஆளரவம் இல்லாமல் ஒதுங்கியிருந்தாலும், கருணாநிதி எதிர்ப்பு மட்டும், அவரை விட்டு நீங்காமல் அப்படியே இருக்கிறது. அந்த எதிர்ப்பின் பொருட்டு அவரால் தடம்மாற்றி விடப்பட்ட தேமுதிக -வோ தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

– மதுரை மாயாண்டி