சென்னை,

மிழகத்தில் இஸ்லாமிய மதகுருக்களான ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்தலாக் குறித்து  மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், இஸ்லாமிய தனி நபர் சட்டத்தின்படி திருமணமான ஆண் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது, ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்கிவிட்டால் அதுவே இறுதி முடிவாக எடுத்து கொள்ளப்படுகிறது.

இது இஸ்லாமிய பெண்களுக்கு எதிரானது.  ஹாஜிக்கள் வழங்கும் சான்றிதழ் வெறும் பரிந்துரையே தவிர அது இறுதி முடிவல்ல.

மேலும், ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரைத்து சான்றிதழ் வழங்கியது, சம்பந்தப்பட்ட பல பெண்களுக்கு தெரியாது.  இந்த நடைமுறையின் போது பெண்கள் ஆஜராகவில்லை என்றாலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆகவே ஹாஜிக்கள், முத்தலாக் சான்றிதழ் பரிந்துரைப்பதை தடை செய்ய வேண்டும்” என்று பதர் சயீத் தெரிவித்திருந்தார்.

மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய பரிந்துரை சான்றிதழ்களில் சிலவற்றை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

இந்த நிலையில் நேற்று, (புதன்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில், “ஹாஜிக்கள் வழங்கும் முத்தலாக் சான்றிதழ் பரிந்துரையே தவிர அதற்கு எவ்விதமான சட்ட மதிப்பு கிடையாது. தம்பதிகள் நீதிமன்றம் மூலமே விவாகரத்து பெற முடியும்ட என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் உள்ள ஹாஜிக்களுக்கு முத்தலாக் வழங்க இடைக்கால தடை விதித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மீண்டும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 21 ஆம் தேதி வருகிறது.