மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஓம்பிரகாஷ், மனுபேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்றனர்.

சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு போட்டி   மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் கடந்த 1ந்தேதி முதல்  நடைபெற்று வருகிறது. வரும் 12ந்தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

நேற்று நடைபெற்ற  10 மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்த ஜோடி 476.1 புள்ளிகள் பெற்றது.

ஜெர்மனியின் கிறிஸ்டியன் ரீட்ஸ் – சாண்ட்ரா ரிட்ஸ் ஜோடி 475.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது.

பிரான்சின் கோபர்வில்லி, பவுகியூட் ஜோடி 415.1 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றது.

இந்தியாவின் ரிஸ்வி, அகர்வால் ஜோடி 372.4 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.

முன்னதாக நடைபெற்ற கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார், மெஹுலி கோஷ் ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. இந்த ஜோடி 435.1 புள்ளிகள் பெற்றது.

சீனாவின் சூ, சென் ஜோடி 502 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றது. இதுவே கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் உலக சாதனையாகும்.

ரோமானியாவின் கோமன், மோல்டோவேனு ஜோடி 498.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தியாவின் குமார், சண்டேலா ஜோடி 392.6 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.

இதன்மூலம் இந்த தொடரில் 3 தங்கம், 4 வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்கள் வென்ற இந்திய அணி பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

ஏற்னவே நடைபெற்ற போட்டியில் மனுபாஸ்கர் தங்கம் வென்றுள்ள நிலையில், தற்போது இரண்டாவது தங்கம் வென்று மீண்டும்  சாதனை படைத்துள்ளார்.