சென்னை:
சென்னை வேப்பேரியில் வடமாநிலத்தில் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு இன்று நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தின்போது, மின்சாரம் தாக்கி 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஹோலி பண்டிகையை யொட்டி, வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் சென்னை வேப்பேரியில், போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து, அதல் தண்ணீர் நிரப்பி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.. மற்றொரு புறம் ஷவரில் தண்ணீர் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று காலை ஹோலி பண்டிகையின்போது, ஏராளமானோர் ஒருவருக்கொருவர் கலர் பொடிகை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் தண்ணீரில் குதித்தும், குளித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென தண்ணீர் தொட்டியில் மின்சாரம் பாய்ந்தது. இதில், ஒரு சிறுவன் உள்பட 4 பேர் தூக்கி வீசப்பட்டு தண்ணீரில் மூழ்கினார்கள். இதனை பார்த்து அங்கு கூடி நின்ற ஆண்களும், பெண்களும் அதிர்ச்சியில் மூழ்கினார்கள். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தண்ணீரில் விழுந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் சோகம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.