டெல்லி: அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உள்பட 10க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.

உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் கடந்த இரு நாட்களாக நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டு முடக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உள்பட 10க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் வரிவிலக்கு அளித்துள்ளது. அரிசி, கோதுமை, தயிர், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை உணவுப் பொருட்களை சில்லரை விற்றாலோ அல்லது பேக்கிங் செய்யாமல், லேபிள் இன்றி விற்றாலோ ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படாது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்டியல் வெளியிட்டுள்ளார். அத்துடன்,   பட்டியலில்  குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களும், தளர்வாக விற்கப்படும் போது, முன் பேக் செய்யப்பட்ட அல்லது முன் லேபிளிடப்படாது. அவை எந்த ஜிஎஸ்டியையும் ஈர்க்காது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற  47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசி, தயிர், பனீர், கோதுமை, கோதுமை மாவு, மைதா உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.  அதாவது, 25 கிலோவுக்கு அதிகமாக இருந்தால் ஜிஎஸ்டி வரி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு இருந்து 25 கிலோ அல்லது 25 லிட்டருக்குள் இருந்தால், ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.