ஓ.பி.எஸ். – கவர்னர் – சசிகலா

ஓ.பி.எஸ்ஸா – சசிகலாவா… கவர்னர் என்ன முடிவு எடுப்பார் என்பதே இப்போது மில்லியன் பில்லியன் டாலர் கேள்வி.

தற்போது சட்டத்தின்படி கவர்னருக்கு உள்ள வாய்ப்புகள் என்ன என்று வழக்கறிஞர் பா.சு. மணிவண்ணனை தொடர்புகொண்டு கேட்டோம்.

அவர் சிம்பிளாக சொன்னதுஇதுதான்:

“ஓ.பி.எஸ்ஸை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அழைக்கலாம்.  அல்லது, சசிகலாவை அழைக்கலாம்.

என்ன இது.. இந்த இரண்டில் எதைச்செய்ய முடியும் என்றுதானே கேட்டோம் என்கிறீர்களா..?

கவர்னர் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம். அப்படி எடுக்கப்படும் முடிவு சரிதான் என்பதற்கு ஏதேனும் சட்டப்பிரிவோ அல்லது அந்த பிரிவில்  ஓட்டையோ இருக்கும். அதைச் சொல்லி சமாளிக்கலாம்” என்றார்.

பா.சு. மணிவண்ணன்

மேலும் அவரிடம், “ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடமை ஆக்கப்போவதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணை கமிசன் அமைக்கப்போவதாகவும் ஓ.பி.எஸ். அறிவித்திருக்கிறார். தற்காலிக முதல்வரான அவருக்கு இதற்கு அதிகாரம் உண்டா?” என்று கேட்டோம்.

அதற்கு அவர், “கொள்கை ரீதியான முடிவுகளைத்தான் அவர் எடுக்க முடியாது. அதாவது மதுவிலக்கு போன்ற விசயங்கள். ஆனால் அவர் கூறியிருப்பது எல்லாமே உத்தரவுகள்தான். அதற்கு அவருக்கு அதிகாரம் உண்டு!” என்றார்  வழக்கறிஞர் பா.சு. மணிவண்ணன்.

மேலும் அவர், “தற்போதைய அரசியல் சூழலைப் பார்க்கும்போது, இப்படி நடக்கும் என்று தோன்றுகிறது.

அதாவது, சிகலாவை பதவியேற்க அழைக்கும் எண்ணம் கவர்னருக்கும் இல்லை. மத்திய அரசுக்கும் இல்லை.

ஆதலால் அதிமுக எம்.எல்.ஏக்களில் பெரும்பான்மையானவர்கள் ஓ.பி.எஸ். பக்கம் வரும் வரை, பதில் சொல்லாமல் கவர்னர் கண்ணாமூச்சு ஆட்டம் ஆடுவார்.

ஏனென்றால், இது போன்ற இக்கட்டான நிலையில் எத்தனை நாட்களுக்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என்பது சட்டத்தில் இல்லை.

ஒருவேளை,  இப்படியே நீண்ட நாட்கள் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். கவர்னரின் மவுனம் குறித்து மக்களிடையே அதிருப்தி எழலாம்.

அப்படியொரு சூழல் ஏற்படால், தி.மு.க.வை கவர்னர் அழைக்கலாம். அல்லது சட்டசபையை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடலாம்” என்றார் வழக்கறிஞர் பாசு.மணிவண்ணன்..