சென்னை:
வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசுகையில், ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் தேவை. இந்தியாவில் ராணுவம், பொருளாதார வளர்ச்சி அடைவதை போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் ஆகிறது.

ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறை இருக்கும். தொடர்ச்சியான ஆன்மீகத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். தற்போது வலிமையான தலைமை இந்தியாவை ஆள்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை என நாம் நாட்டை பற்றி கூறுகிறோம். அதையேதான் நமது சனாதனமும் வலியுறுத்துகிறது. சோமநாதர் கோயில் சொத்துகளை அழித்து கந்தகர், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்காவால் தகர்க்கப்பட்டன. இதிலிருந்தே சனாதனத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது என்றார்.

இந்நிலையில், வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதன தர்மம் குறித்தும், வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது கண்டனத்திற்கு உரியது என்று குறிப்பிட்டுள்ளார்.