சென்னை: தமிழக அரசின் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில்அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த மார்ச் மாதம் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை தமிழகஅரசுக்கு வழங்கியது. அதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு  மருத்துவப்படிப்பில் 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழகஅரசு சட்டம் இயற்றியது. இதனால் 300க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஆனால், தமிழகஅரசின்  மசோதா ஆளுநரின் அனுமதிக்க அனுப்பப்பட்ட நிலையில்,  இதுவரை அவர் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்.
இதுகுறித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது வரை ஆளுநர் அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆளுநர் ஒப்புதலுக்கு முதலமைச்சர் பழனிசாமி அழுத்தம் கொடுக்காமல் இருப்பபதாக குற்றம் சாட்டி உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள,
“மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்றுவரை தமிழக ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதுகுறித்த எந்த அழுத்தத்தையும் ஆளுநருக்குக் கொடுக்காமல் முதலமைச்சர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும்; அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், “தமிழக ஆளுநர் முதலமைச்சர் – மத்திய பா.ஜ.க. அரசு” ஆகியோர் ஒரு ரகசியக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என்றும் – நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]