தஞ்சை: மத்திய அமைச்சரவையில், ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில்,  மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது என  அதிமுக எம்.பி. வைத்தியலிங்கம்  கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. கடந்தஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவைச் சேர்ந்த  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். இதையடுத்து, மோடி அரசில் அதிமுகவுக்கு இடம் கிடைக்கும் என கூறப்பட்டது.  ரவீந்திரநாத் குமார் அல்லது அதிமுக ராஜ்யசபை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் இணை அமைச்சர்கள் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுகவிற்கு இடம் வழங்கப்பட்வில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதிமுக முதல்வர் வேட்பாளர் தேர்வில், எடப்பாடிக்கும், ஓபிஎஸ்-க்கும் இடையே ஏற்பட்டிருந்த பிணக்கு நீங்கி, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய பாஜக அமைச்சரவையில் ஓபிஎஸ் மகனுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில், தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த  அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற வாய்ப்பில்லை என்று கூறினார். மேலும், தேவையான இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.