சென்னை: சாதிப் பெயர்களை நீக்குவதில் திமுக அரசு அதீத ஆர்வம் காட்டி வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விஷயத்தில், இறுதி முடிவு கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு,  ஊர்கள், தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்குவது குறித்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கக் கூடாது சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

ஊர்கள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி, மறு பெயரிடுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, மறுபெயரிடுவது தொடர்பாக மக்களின் கருத்துகளை மதிப்பாய்வு செய்து, கள நிலைமை மற்றும் களத்தில் உள்ள உண்மைத் தன்மையின் அடிப்படையில் மறுபெயரிடுதல் பணியை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இறுதிசெய்யப்பட்ட பெயர்களை மாற்றம் செய்வதற்கான பணிகளை நவம்பர் 11 ஆம் தேதிக்குள் முடித்து, மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு பெரும்பாலான மக்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும், இதுபோன்று திடீரென  பெயர் நீக்கம் செய்தால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பத்திரம், பாஸ்போர்ட் என ஒன்று விடாமல் பெயர் திருத்தம் செய்ய வேண்டி வரும், இது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாக அமைந்து விடும். அதனால், இதில் தீவிரம் காட்டக்கூடாது என்று  பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

அரசு அரசாணையில் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவைச் சார்ந்த மக்களையும், அவர்களது உணர்வுகளையும் இழிவுபடுத்துவதாக அல்லது பாகுபாடு காட்டும் வகையில் அமைந்திருந்தால் நீக்க வேண்டும் என்று தான் கூறப்பட்டிருந்தது.

இந்த சூழலில் தமிழக அரசின் அரசாணை பலராலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. எப்படி என்றால், சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்று பொதுவாக புரிந்து கொள்ளப்பட்டது. அப்படி நீக்குவதாக தெரிந்தால், பல ஊர்களின் பெயர்களை அரசு அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும். பல ஆயிரம் ஊர்களின் பெயர்கள சாதி பெயருடன் தான் இருக்கும். நாயக்கர், தேவர், வன்னியர், கவுண்டர், செட்டியார், பள்ளர், பறையர், அருந்ததியர் என பல்வேறு சாதி பெயர்களில் ஊர்கள் அமைந்துள்ளன. இதை மாற்றுவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

எனவே அரசு, ஊர் பெயர்களை, சாதி தெரு பெயர்களை மொத்தமாக மாற்ற வாய்ப்பு மிகமிக குறைவு.. அப்படி செய்தால் அது தேன் கூட்டில் கை கைப்பது போல், எந்த அரசாக இருந்தாலும் ஆபத்தானது. அதை ஒரு நாளும் எந்த அரசும் செய்ய வாய்ப்பு இல்லை..

அதேநேரம் சாதி பெயர்களில் தான் பல தெருக்கள் அமைந்துள்ளன அவற்றில் தான், மக்களின் உணர்வுகளையும் இழிவுபடுத்துவதாகவோ அல்லது பாகுபாடு காட்டுவதாகவோ இருந்தால் மாற்றலாம் என்று அரசு பரிந்துரைத்துள்ளது. இது ஒன்று மட்டுமே நடைமுறையில் சாத்தியமாக வாய்ப்பு உள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

காட்டூர் ஊராட்சி யில் இடம்பெற்றுள்ள, காட்டூர், காட்டூர்புதுார், சந்தவநாயக்கன்பாளையம், கெங்கநாயக்கன்பாளையம் ஆகிய ஊர்களில் ஜாதிப்பெயரில் காலனிகள் உள்ளன. அவற்றை நீக்க அதிகாரிகள் தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டவில்லை.

திமுக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிரானக,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  சாதிப் பெயர் மாற்றம் குறித்த அரசின் உத்தரவுக்கு  பாராட்டு தெரிவித்த மதுரை அமர்வு, சாதிப் பெயர்களை மாற்றுவது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

இருப்பினும், சாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து கருத்துக் கேட்பு, ஆய்வுகள் மேற்கொள்ள அனுமதியளித்ததுடன், பெயர் மாற்றத்தால் ஏற்படும் குழப்பத்துக்கு என்ன முடிவு? என்று தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.