மதுரை: மது வாங்குவோருக்கு அரசின் அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மதுவிற்பனை மதியம் 12:00 முதல் இரவு 10:00 மணிவரை செயல்படுகின்றன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சட்டப்படி மது விற்பனை செய்யக்கூடாது என்றும், மதுவின் தீமைகள் குறித்து டாஸ்மாக் கடைகள், பார்கள் முன் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். விலைப்பட்டியல் தமிழில் வைக்க வேண்டும். புகார் செய்ய வசதி செய்ய வேண்டும். மதுவின் பெயர், அவற்றில் கலந்துள்ள பொருட்கள், தயாரிப்பாளர் விபரங்கள் மது பாட்டிலில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு கண்டுகொள்வது இல்லை. விதிகளை மீறி அதிகாலை முதலே, டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டு, மது அருந்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், திருட்டுத்தனமாக மது விற்பனையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள், பார்கள் மதியம் 2:00 மணியிலிருந்து இரவு 8:00 மணிவரை மட்டும் செயல்பட உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், எஸ்.எஸ். சுந்தர், பரதசக்கரவர்த்தி விசாரித்தது. இதைடுத்து, மது வாங்குவோருக்கு அரசின் அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும், அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். மேலும், டாஸ்மாக் தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை 8 மாத காலமாக அமல்படுத்தவில்லை என் கடிந்து கொண்ட நீதிபதிகள், இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.