சென்னை: சாமானிய மக்களின் அட்சயபாத்திரமாக திகழும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துகொண்டே வருகிறது. ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து தினசரி உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்று ரூ.54,000 கடந்துள்ளது.
நாடுமுழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் கூறியபடி, ஏப்ரல் முதல் தங்கத்திற்கான இறக்குமதி வரி உயர்வு காரணமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. உலகளாவிய தங்க விலை உயர்வு இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக பலவீனமடைந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம்.
உலகப் பொருளாதாரம் மற்றும் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்கள் ஆகியவற்றால் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். பலவீனமான பொருளாதாரத்தின் அறிகுறிகள் இருந்தபோதிலும், புவிசார் அரசியல் அச்சத்தின் காரணமாக தங்கத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும், இது விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள். உதாரணமாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகளாவிய பதற்றத்தை அதிகரித்துள்ளது, இது தங்கத்தின் விலை உயர வழிவகுத்துள்ளது. மேலும் இந்திய நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கலின்போது, தங்கத்தின்மீதான இறக்குமதி வரி நடப்பாண்டு முதல் உயர்த்தப்படும் என அறிவித்தும், தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், இந்தியாவில் திருமணங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கத்தின் தேவை அதிகரிப்பதால், விலையும் உயரக்கூடும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய மக்களிடையே, குறிப்பாக பெண்களுக்கு பிடித்தமான நகைகளில் தங்கம் முதலிடம் பெற்றுள்ளது. கீழ்நிலை மக்கள் முதல் உயர்நிலை மக்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் தங்கம் என்றாலே அலாதி பிரியம். குறிப்பாக நடுத்தர வர்த்கக பெண்களின் வாழ்வாதாரமே தங்கத்தை சுற்றியே சுழல்கிறது.
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். இதனால் தங்கத்தின் விலை மாற்றம் தமிழக பெண்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
2024 முதலே தங்கத்தின் விலை ஏறி இறங்கி வந்த நிலையில், மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்தே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறத. ஏற்பரல் 8ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கு விற்பனையானது. கடந்த 9ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 53,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் 10 ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,705-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,640-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.54,000 கடந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,805க்கு விற்பனையாகும் நிலையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,440 ஆக அதிகரித்துள்ளது.