திருவனந்தபுரம்: பெரியாருக்கு கிடைத்த புகழ் மாலைதான் திராவிடத்தின் வெற்றி, ‘வரலாற்று பெருமை; சாதிய பாகுபாடுக்கு எதிராக போராட்டம் தொடர வேண்டும்’ வைக்கம் விழாவில் சிறப்புரை ஆற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
“100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளோம். ஆனால் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.” “வைக்கம் ஒடுக்கு முறையை எதிர்த்த கேரள காங்கிரஸ் தலைவர்கள் கைதாகினர்; வைக்கம் போராட்டத்தின் போது பெரியார் இரு முறை கைதானார். வைக்கம் போராட்ட நினைவு அஞ்சல் தலையை விரைவில் வெளியிட உள்ளோம்” என்றும் முதல்வர் கூறினார்.
கேரள மாநிலம் வைக்கம் நகரில் மகாதேவர் கோவில் உள்ளது. அந்த கோவில் இருக்கும் தெருவில் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் செல்ல தடை இருந்து வந்தத. இதை எதிர்த்து, 1924-ம் ஆண்டில் பெரியார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம்தான் வைக்கம் போராட்டம் என கூறப்படுகிறது. இந்த போராட்டத்தின் வெற்றியை நினைவுகூறும் வகையில் பெரியாருக்கு வைக்கத்தில் நினைவகம் அமைக்கப்பட்டது. கேரள அரசு வழங்கிய நிலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அந்த நினைவகம் கட்டப்பட்டு 1994-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும் அமர்ந்த நிலையில் அங்கு பெரியார் சிலையும் இருக்கிறது.
அந்த நினைவகம் பராமரிப்பின்றி கிடந்த நிலையில், அதனை புனரமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில், ரூ.8 கோடியே 14 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன்படி, புனரமைப்பு பணிகளும், நூலகத்தை விரிவுபடுத்தும் பணிகளும் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டன. அதில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான அரிய புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா ஆகியவை சிறப்பான முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை கேரள மாநிலம் கொச்சிக்கு முதலமைச்சர் சென்றார்.
அதைத்தொடர்ந்து, கேரள மாநிலம் கோட்டயத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் சேர்ந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த நிகழ்வின்போது, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “பெரியாருக்கு எதிராக யாகம் நடத்திய ஊரில் அவருக்கு புகழ் மாலை சூட்டப்பட்டுள்ளது. பெரியாருக்கு கிடைத்த புகழ் மாலைதான் திராவிடத்தின் வெற்றி. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை காண கருணாநிதி இல்லையே என்ற வருத்தம் உள்ளது. எதற்கு அஞ்சாமல் பணியாற்றி சமூகத்தை விழுப்புடன் வெற்றி பெற வைத்தவர் பெரியார் என்று அண்னா கூறினார்.
சமூக அரசியல் போராட்ட வெற்றியின் சின்னமாக வைக்கத்தில் பெரியார் நினைவகம் உள்ளது. வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ அதைபோல பெரியார் நினைவகமும் கம்பீரமானது. வைக்கத்தில் பெரியார் நினைவகம், நூலகம் திறந்து வைக்கப்பட்ட இந்நாள் சமூக நீதி வரலாற்றில் பொன்னெழுத்தளால் பொறிக்கப்பட வேண்டும். சமூக அரசியல் போராட்டத்தின் வெற்றியின் சின்னமாக வைக்கம் நினைவகம் அமைந்துள்ளது.
வைக்கம் ஒடுக்குமுறையை எதிர்த்த கேரள காங்கிரஸ் தலைவர்கள் கைதாகினர்; வைக்கம் போராட்டத்தின் போது பெரியார் இரு முறை கைதானார். வைக்கம் போராட்ட நினைவு அஞ்சல் தலையை விரைவில் வெளியிட உள்ளோம். இனி நாம் அடையவிருக்கு வெற்றிகளுக்கு அடையாளமாக வைக்கம் நினைவகம் இருக்கும். பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தது எனக்கு கிடைத்த வரலாற்று பெருமை.
பெரியார் நூலகம் கட்டிய கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய அளவில் ஆளுமைமிக்க தலைவராக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திகழ்கிறார். கேரளாவிற்கு வரும் அனைவரும் வைக்கம் நினைவகத்திற்கு வர வேண்டும்.
நாட்டில் சமூக நீதிக்கான தொடக்கப் புள்ளி வைக்கம் போராட்டமாக இருந்தது. வைக்கம் போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து பங்கேற்றவர்களின் பட்டியல் நீளமானது. வைக்கம் போராட்டத்தில் வெற்றி பெற்ற பெரியாரை ‘வைக்கம் வீரர்’ என திரு.வி.க. போற்றினார். சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான நமது போராட்டத்தை தொடர வேண்டும்.
100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளோம். ஆனால் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. எவ்வளவு சட்டங்கள் இயற்றினாலும் மக்கள் மனதில் மாற்றம் வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்பது திராவிடல் மாடல் அரசின் கொள்கையாகவே உள்ளது. தமிழ்நாட்டை போல கேரளாவிலும் முற்போக்குத் திட்டங்கள் நிறைவேற்றம்.
எல்லாவற்றையும் சட்டம் போட்டு மாற்றிவிட முடியாது. சட்டம் தேவைதான்; அதைவிட மக்கள் மனமாற்றம் மிகவும் முக்கியம். யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்கள் மனதில் வளர வேண்டும். பகுத்தறிவு மற்றும் அரசியல் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். முன்பு இருந்ததைவிட வேகமாக செயல்பட வேண்டும்; நவீன வளர்ச்சியால் பாகுபாடுகளை நீக்க வேண்டும். சமநிலை சமூகத்தை அடைய நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.
இவ்வாறு பேசினார்.