கொழும்பு: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு பதிலாக, மீண்டும் புதிய ஸ்தூபி அமைப்பதற்காக அதே இடத்தில் இன்று (ஜனவரி 11) அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களால் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 8ம் தேதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. கோத்தபய அரசின் உத்தரவைத்தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் அந்த நினைவு முற்றத்தை இடித்து அகற்றியதாக கூறப்பட்டது.
இதையடுத்து, மாணாக்கர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த 9ம் தேதி முதல் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது மாணாக்கர்களின் போராட்டத்துடன் பொதுமக்களும் கலந்துகொண்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. ஏராளமான காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.
சிங்க அரசின் இந்த நடவடிக்கை தமிழகம் உள்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் ஸ்துபிக்கு பதிலாக புதிய ஸ்தூபி அதே இடத்தில் கட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதையடுத்து, போராட்டங்களுக்கு மத்தியிலேயே, இன்று மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணாக்கர்களின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் புதிய ஸ்தூபி அமைப்பதற்காக அதே இடத்தில் இன்று (ஜனவரி 11) அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.