டில்லி:

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உள்பட மூத்த உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் நடைபெற்று வருகிறது.

17வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று முடிந்த நிலையில்,  17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல்  ஜூலை 26-ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது.

முன்னதாக மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக மூத்த உறுப்பினர் வீரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து மக்களவை கூட்டம் தொடங்கியது. தொடக்க நிகழ்வுகள் முடிவடைந்தும் பதவி ஏற்கும் நிகழ்வுகள் தொடங்கின

முதலாவதாக  வாரணாசி எம்.பி- யாக பிரதமர் மோடி பதிவியேற்றார்.  அவருக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், போக்குவரத்து துறை நிதின் கட்சி உள்பட காங்கிரஸ் உறுப்பினர் கேரளாவின் மாவேளிக்கார மக்களவை உறுப்பினரான  சுரேஷ் கொடிக்குன்னில்  உள்பட பலர் பதவி ஏற்றனர். தொடர்ந்து பதவி ஏற்பு நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட 542 பேரும் இன்றும், நாளையும்  பதவி ஏற்பார்கள் அதன்பிறகு வரும் 19-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்.

அதைத்தொடர்ந்து, வரும் 20ந்தேதி  ர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்உரை நிகழ்த்தவுள்ளார்.

தொடர்ந்து  ஜூலை 5-ஆம் தேதியன்று பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தல் முடிவடைந்தபிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். ஆதலால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் உள்பட 10 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.