மின்துறை மீதான மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள்
4500 மெகாவாட் அளவிற்கு காற்றாலை மின்சக்தி படிப்படியாக நிறுவ திட்டம்
2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிற்கு புனல் மின்திட்டங்கள்,
13 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு அனல் மின்திட்டங்கள்
ராமநாதபுரத்தில் 500 மெகாவாட் சூரிய பூங்கா
சென்னை:
தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகச் சட்டப்பேரவையில் மின்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் வேளாண்மை பாதிக்கப்படுவதாகவும், அதை மாற்றி அமைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விளைநிலங்களில் உள்ள மின்கோபுரங்கள் வழியாகத்தான் மின்சாரம் கொண்டுவரப்படுகிறது. விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும்போது நிலத்தின் மதிப்பைவிட இரண்டரை மடங்கு மூன்றரை மடங்குத் தொகை விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் மின் தேவையைக் கருத்தில் கொண்டும் மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், பழுதடைந்த மின்மாற்றிகள் ஒரு மாதத்திற்குள் சரி செய்யப்படும் எனவும், இந்தாண்டு மட்டும் கோடைக்காலத்தில் 1 லட்சத்து 66 ஆயிரம் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்படுள்ளதாகவும். தவறுகளை தடுக்கவே டிஜிட்டல் மின்மீட்டர் பொறுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து, பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானிய கோரிக்கைகளை அமைச்சர் தங்கமணி தாக்கல் செய்தார்.
அதில், வருங்கால மின்தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக, 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிற்கு புனல் மின்திட்டங்கள், 13 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு அனல் மின்திட்டங்களையும் கூடுதலாக நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவுதிறனையும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் 500 மெகாவாட் சூரிய பூங்கா அமைக்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-18ஆம் ஆண்டில் கூடுதலாக 4500 மெகாவாட் அளவிற்கு காற்றாலை மின்சக்தி படிப்படியாக நிறுவ திட்டமிடப்பட்டது என்றும், இதன் அடிப்படையில் இதுவரை மின்கட்டமைப்புடன் சேர்க்கப்பட்ட காற்றாலை மின்சக்தியுடன் கூடுதலாக 450 மெகாவாட் அளவிற்கு மின்கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒப்பந்தப்புள்ளி முறையில் படிப்படியாக 1, 500 மெகாவாட் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதுதவிர இந்திய மின்விசை கூட்டமைப்பு நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 800 மெகாவாட் அளவிற்கு காற்றாலை திட்டங்களை மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.