பெங்களூரு: மக்கள் நலத்திட்டங்களை கர்நாடகாவில் திறந்து வைக்க வருகை தந்தை பிரதமர் மோடியை, பாஜகவைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் சந்தித்து வண்ணம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான போட்டோவை கர்நாடக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இது மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் அடிக்கடி கர்நாடக மாநிலம் விஜயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில், பெங்களூர் -மைசூர் இடையேயான 10 வழி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தந்தார். இந்த 10 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவில் உள்ள கெஜ்ஜலகெரே கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது 10வழி சாலையை திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த 10 வழிச்சாலையில் 6 வழித்தடங்கள் நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கும், மீதமுள்ள 4 வழித்தடங்கள் சர்வீஸ் ரோடுகளாகவும்  உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது போக்குவரத்து துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மாண்டியா வருகை தந்தபோது, அங்குள்ள  பிஇஎஸ் கல்லூரியில் ஹெலிபேட்டில் வந்திறங்கினார். அப்போது, அவரை பிரதமர் மோடியை முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகின. இதில் ஒரு போட்டோ தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பிரதமரை வரவேற்றவர்களின் பட்டியலில், ரவுடி ஒருவரும் இடம்பெற்றிருந்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமரை வரவேற்ற ரவுடி பெயர் . பைட்டர் ரவி என்ற என்ற மல்லிகார்ஜூன் என்பவரும் அவர்மீது பல்வேறு அடிதடி, கொலை வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரவுடி ஒருவரை பிரதமர் கும்பிட்டு வணக்கம் தெரிவித்ததை, காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. “உலகில் பாஜக போன்ற வெட்கக்கேடான கட்சி இல்லை. ரவுடி ரவிக்கு முன்பு பிரதமர் கைகூப்பி நிற்கிறார். இது பிரதமர் பதவிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று கூறிய கட்சி தற்போது வெட்கக்கேடான வகையில் பிரதமரை வரவேற்க ரவுடி முன் நிற்க வைத்துள்ளது” என சாடியுள்ளது.

 ரவுடி ரவி, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மண்டியா மாவட்டம் நாகமங்களா சட்டசபை தொகுதியில் போட்டியிட பாஜகவிடம் சீட் கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த ரவுடி ரவி,  ‛‛பிரதமர் மோடியை வரவேற்க பாஜக வாய்ப்பளித்ததை வாழ்வின் பெருமையான தருணமாக நினைக்கிறேன். என் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் எனது பெயரை கெடுக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இநத் விவகாரம் குறித்து,  விளக்கம் அmளித்த மத்திய அமைச்சர் சோபா கரந்தலாஜே ‛‛ரவி என்பவர் யார்? என பிரதமர் மோடிக்கு தெரியாது. பிரதமரை சந்திக்க அனுமதிக்கப்பட்ட நபர்களின் பெயர் பட்டியலை எஸ்பி கண்காணித்து இருக்க வேண்டும். இது நடக்கவில்லை. இந்த குறைபாட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பல்ல. ரவி ஏன் பிரதமரை சந்திக்க வந்தார் என்பது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.