சென்னை:
மின்சார சட்டத்திருத்த மசோதா கூட்டாட்சிக்கு எதிரானது? மாநில அரசு அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது , அதை நிறுத்தி வையுங்கள் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய அரசு விரைவில் கொண்டுவர உத்தேசித்திருக்கும் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கான வரைவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைவு மாநில உரிமைகளுக்கு எதிரானது, தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.

2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான வரைவுச் சட்டம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. 21 நாட்களுக்குள் இது தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது. மின்துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கவே இந்தத் திருத்தங்களைக் கொண்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த மசோதாவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர், இந்த மின்சார திருத்த மசோதாவை நிறுத்தி வையுங்கள் என்று பிரதமர் மோடிக்கு காட்டமாக கடிதம் எழுதி உள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவில் இருக்கும் புதிய திருத்தங்கள் மாநில கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடுவதாகவும் உள்ளது.
கொரோனா தடுப்புப் பணிகளில் நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் கவனம் செலுத்துவதால், மத்திய அரசு அனுப்பியிருக்கும் சட்டத்திருத்த மசோதா மீது அலோசிக்க அவகாசம் தேவை.
விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்குவது என்பது மாநில அரசின் உரிமை சார்ந்தது.  அதை மாநில அரசிடமே விட்டுவிட வேண்டும்.
அது மட்டுமல்லாமல் மின்சார சட்டத்திருத்த மசோதாவில் கூறப்பட்டிருக்கும் சில ஷரத்துகள், மாநில அரசுகளின் மின்சாரத் துறைக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என்பதாலும், மேலும் சில அம்சங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது,
குறிப்பாக இதுபோன்ற பேரிடர் காலத்தில் இது மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற பேரிடர் காலத்தில், புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டு வர இது சரியான காலமாக இருக்காது என்று தெரிகிறது.
எனவே, புதிய சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், பேரிடர் காலம் முடிந்த பிறகு, இது பற்றி தமிழக அரசு ஆலோசித்து பரிந்துரைகளை அனுப்பும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.