ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அருந்ததியினர் குறித்து சீமான் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. அங்கு நாம் தமிழர்கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் சீமான் பரப்பரை மேற்கொண்டார். அப்போது, அருந்ததியர் சமூக மக்கள் தூய்மைப் பணிக்காக ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அருந்தியினர் சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில அரசியல் கட்சிகள், சீமானின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இதுதொடர்பாக வருத்தம் தெரிவிக்க மறுத்த சீமான், “அருந்ததியின மக்கள் குறித்து வரலாற்றுத் தகவல்களையே பேசினேன். மராத்திய மன்னர்கள் ஆண்டபோது ஆந்திராவில் இருந்து இங்கு வந்தவர்கள்தான் அருந்ததியர்கள் என்பது வரலாறு. அதற்கான வரலாற்று ஆதாரங்களை கூட காட்ட தயார். இதில் அவர்கள் கோபித்துக்கொள்ள ஒன்றுமில்லை. அருந்ததிய மக்கள் மீது எனக்கு பேரன்பு உள்ளது. திமுக தனது வாக்குவங்கி போய்விடும் என அருந்திய அமைப்பினரை தூண்டி விட்டு இந்த சர்ச்சையை கிளப்பியுள்ளனர்” என விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், அருந்ததியினர் குறித்து அவதூறாக சீமான பேசியதாக எழுந்த புகாரில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்றும், விளக்கமளிக்கவில்லை என்றால் வேட்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.