சென்னை: கொரோனா தீவிரமாக பரவியதற்கு தமிழக தேர்தல்ஆணையமும் பொறுப்பு, அதன்மிது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறு கிடையாது, கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
கரூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், அங்கு உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் ஏற்பாடுகளை தீவிர செய்ய வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
கரூர் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தனிமனித இடைவெளி பின்பற்ற முடியாத சூழல் ஏற்படும். எனவே வாக்கு எண்ணிக்கை மூன்று அறைகளில் நடத்த வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், ” சமூக இடைவெளியின்று அரசியல் கட்சிகள் விரும்பும் போல் பிரச்சாரம் செய்ததால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தற்போது ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளுக்கும் தேர்தல் ஆணையமே காரணம். தேர்தல், பிரச்சாரம் நடக்கையில் தேர்தல் அதிகாரிகள் வேற்றுகிரகத்தில் இருந்தார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தவறே கிடையாது.
வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி, அரசியல் கட்சிகள் தேர்தல் பேரணிகளை நடத்துவதை தடுக்காததற்காக இந்திய தேர்தல் ஆணையம் மீது கடுமையாக சாடியவர், கொரோனா இரண்டாவது அலைக்கு ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே காரணம், அது தேர்தல் ஆணையமே. தற்போதைய கொரோனா பாதிப்புகளுக்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மீது, கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சாடியதுடன், பொது சுகாதாரம் மிக முக்கியமானது, இது தொடர்பாக அரசியலமைப்பு அதிகாரிகளுக்கு நினைவூட்டப்பட வேண்டியது வருத்தமளிக்கிறது, ஒரு குடிமகன் தப்பிப்பிழைத்தால்தான் ஒரு ஜனநாயக குடியரசு உத்தரவாதம் அளிக்கும் உரிமைகளை அவர் அனுபவிக்க முடியும் என்று கூறினார்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தால்தான் கொரோனா அதிகரித்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணையமும் காரணமாக இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் உரிய கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாத பட்சத்தில், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்று எச்சரித்துடன், கொரோன தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டு, ஏப்ரல் 30 ஆம் தேதி பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் ” என்று நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.