சென்னை:

சென்னை வடபழனியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான அம்பிகா எம்பையர் ஓட்டல் விற்பனை செய்யப்படு வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பலே நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வடபழனி 100அடி சாலையில் ‘அம்பிகா எம்பையர்’ என்ற பெயரில் தனியார் நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த பிரபல ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாக  மோசடி நபர்கள் 3 பேர், கேரளாவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தினரிடம் பேசி வந்துள்ளனர்.

தாங்கள்தான் அம்பிகா ஓட்டலின் உரிமையாளர்கள் என்று கூறி ஆள்மாறாட்டம் செய்து, ரூ.165 கோடிக்கு விலை பேசியுள்ளனர் . இதனை நம்பி அந்த பிரபல நிறுவனத்தின் மேலாளர் குலாம் நபி சென்னைக்கு வந்து அந்த ஓட்டலை பார்வையிட்டுள்ளார்.

அவர்களும் அம்பிகா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு,  இவர்களும் அங்கே 2 நாட்கள் தங்கி பேச்சு வார்த்தை நடத்தி வந்திருக்கின்றனர்.  இந்த பேச்சு வார்த்தை அந்த ஓட்டலின் லாபியில் வைத்து நடைபெற்றுள்ளது.  கேரள நபரிடம்,  மோசடி பேர்வழிகள், உள்பட ஓட்டலின் மேலாளர்கள் என கூறி மேலும் 2 பேர் சேர்ந்து, 5 பேராக கேரள நபரிடம் தாங்கள்தான் உரிமையாளர்கள் போல காட்டிக்கொண்டு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

இதை தற்செயலாக கண்ட ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, இது குறித்து உண்மையான ஓட்டல் மேலாளரிடம் தெரிவித்து உள்ளார். அவர்கள்  மோசடி பேர்வழிகள் நடத்தும் உரையாடலை கேட்டதும், உண்மையான ஓட்டல் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியை அடைந்த அம்பிகா ஓட்டல் உரிமையாளர் காவல்துறையில் புகார் கொடுக்க,  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், மோசடி பேர்வழிகளை கொத்தாக அள்ளிச் சென்றனர்.

விசாரணையில் ஓட்டலை ரூ.165 கோடிக்கு மோசடியாக போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது. அந்த போலி ஆவணங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், மோசடி பேர்வழிகளான கருணாகரன் (வயது 70), பதமானந்தம் (வயது 55), தட்சிணா மூர்த்தி (வயது 60) ஆகியோ 3 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த  மேலும் இருவர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. வயதான 3 நபர்கள் பிரபல ஓட்டலையே ஆட்டையை போட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.