டெல்லி: தற்போதைய இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையில் உள்ளது என்று பட்ஜெட் குறித்து முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தி நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சவால்களை எதிர்கொண்டு இருப்பதாகவும், தற்போது பொருளாதார இழப்புகளை சரிசெய்து இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாகவும், கொரோனா பரவலுக்கு முந்தைய பொருளாதார நிலைக்கு இந்தியா திரும்பி உள்ளது என்று கூறியதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.2%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்கள் ஏதும் இல்லை என்று கடுமையாக அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இது ஜீரோ பட்ஜெட் என்று ராகுல்காந்தியும், பட்ஜெட்டில் ஒண்ணுமே இல்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜேவாலாவும் விமர்சித்து இருந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரும் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை காட்டுகிறது என்றும், “எளிமையான மொழியில் கூற வேண்டுமென்றால், 31.3.2022 அன்று GDP 31-3-2020 அன்று இருந்த அதே அளவில் இருக்கும் என்று அர்த்தம்” என்று பதிவிட்டு உள்ளார்.