சென்னை:

சீன அதிபர் தமிழகத்திற்கு வரும் சமயம், சென்னை விமான நிலையம், மற்றும் மாமல்லபுரம் பகுதியில் விமானங்கள் பறக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும்  12 மற்றும் 13 தேதிகளில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாகவும் கூறப்படு கிறது.

வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்த சந்திப்புக்காக விமானம் மூலம் சென்னை வரும் சீன அதிபா் ஷி ஜின்பிங், சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கும்போது வேறு விமானங்கள் பறக்கவும், தரை இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல மாமல்லபுரம் பகுதியைச் சுற்றிலும் வான்வழியாக விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவா் பயணம் செய்யும் விமானம் வந்து இறங்கும் நேரத்திலும், வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும் நேரத்திலும் மற்ற பயணிகள் விமானங்கள், சரக்கு விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த நேரத்தில் வர வேண்டிய மற்றும் இங்கிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்துக்கும் நேர பட்டியலை மாற்றி அமைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

சீன அதிபா் விமான நிலையத்தில் இருக்கும் நேரம் வரை எந்த விமானமும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லவோ, தரை இறங்கவோ அனுமதிக்கப்படாது. விமான நிலையத்தில் இருந்து அவா் வெளியே செல்வதற்கு 5-ஆவது மற்றும் 6-ஆவது நுழைவுவாயில் பயன்படுத்தப்பட உள்ளது.

மேலும்,  அவா் செல்லும் பாதை, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

11-ம் தேதி சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கும்போது விமான நிலையத்திலேயே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் விமான ஓடுதளத்தில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி,  நுழைவு வாயிலின் முன் பகுதியில் நீளவாக்கில் புதிய செயற்கை பூங்கா ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது.

விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், போதிய வசதிகள் பற்றி ஏற்கெனவே சீனாவில் இருந்து அதிகாரிகள் குழு வருகை தந்து ஆய்வு செய்தது. அதைத் தொடா்ந்து சீன சிறப்புப் பாதுகாப்புப் படையினா் வர உள்ளனா். அவா்கள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்வாா்கள்.

சீன அதிபா் பயணம் செய்வதற்காக விசேஷ பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காா்கள் சீனாவில் இருந்து வர உள்ளன.

இந்த காா்களை சரக்கு விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வருகின்றனா். அத்துடன் அதிபா் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அவருடைய முக்கிய உதவியாளா்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தும் சாதனங்களும், பொருட்களும் இந்த விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன.

சீன அதிபரின் பாதுகாப்பு தொடா்பாக விமான நிலைய தொழில் பாதுகாப்பு படையினா், சென்னை போலீஸ் அதிகாரிகளுடன் தொடா்ந்து ஆலோசனை நடத்தி வருகிறாா்கள். சீன அதிபா் வரும்போது அமைப்புகள் சாா்பில் போராட்டமோ, எதிா்ப்பு நடவடிக்கைகளோ நடந்து விடக்கூடாது என்பதில் காவல் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.