“உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கும் நாடு இந்தியாதான். இந்த நிலைில் பிரதமர் மோடி.. இந்த குறைவான நிதியில் மேலும் 20 விழுக்காடு குறைத்துவிட்டார்” என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் ,இன்று (13.10.2017)சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது விடுத்த ஊடக செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

“டெங்கு காய்ச்சல் தமிழத்தில் வேகமாக பரவிவருகிறது. மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. டெங்குவைத் தடுப்பதற்கும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கு வதற்கும் முடியாமல் அரசு திணறிவருகிறது.

மத்திய – மாநில அரசுகளின் அக்கறையின்மையே இதற்குக் காரணம்.

உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கும் நாடு இந்தியாதான்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 விழுக்காடுதான் மத்திய – மாநில அரசுகள் மக்கள் நல்வாழ்வுத்துறைக்காக ஒதுக்குகின்றன.

இதில் உலக சராசரி 6.0 விழுக்காடு ஆகும். ரஷ்யா 3.7, சீனா 3.1, தென் ஆப்ரிக்கா 4.2, இலங்கை 2.0 தாய்லாந்து 3.2 விழுக்காட்டையும் ஒதுக்குகின்றன.

இந்த நிலையில் மத்தியில் மோடி பிரதமர் ஆனவுடன் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ,2015 ல் 20 விழுக்காடு குறைக்கப்பட்டது.

இது மோசமான நடவடிக்கையாகும். எனவே, மத்திய மாநில அரசுகள் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை உலக நல நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது போல், ஜி.டி.பி யில் 5 விழுக்காடு ஒதுக்க வேண்டும்”  இவ்வாறு டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் கூறி உள்ளார்.