டோக்கியோ: ஜப்பானில் புதிய வகையிலான உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது இங்கிலாந்தில் காணப்பட்டதை விட வித்தியாசமானதாக  இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஓராண்டுகளை கடந்தும், முற்றிலும் கட்டுப்படுத்தப்ப முடியாத நிலை தொடர்கிறது. இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் புதிய வகையிலான உருமாறிய கொரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. எந்தவித அறிகுறியும் தெரியாமல் 70சதவிகிதம் வேகமாக இந்த வைரஸ் பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தெரிவித்தனர்.
இந்த உருமாறிய வைரஸ் இந்தியா உள்ள பல நாடுகளில் பரவத்தொடங்கி உள்ளது. சீனாவிலும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.  இதையடுத்து 2 மாகாணங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவது மக்களிடையே  கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், தொற்று பரவலை தடுக்கும் வகையிலான தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதை மக்களுக்கு செலுத்தும் பணிகளும் பல நாடுகளில் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில், ஜப்பானில் புதிய வகை உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 4 பேரிடம்  நடத்தப்பட்ட கொரோனா சோதனையில்,  45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், பெண் ஆகியோருக்கு இந்த கொரோனா தொற்று இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 பேருக்கு எந்தவித அறிகுறியும் தென்படாத நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்றானது  இங்கிலாந்து, ஆப்பிரிக்கா நாடுகளில்  உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.