குவைத் நாட்டின் தனியார் நிறுவனத்தில் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்கள், நாடு திரும்ப விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குவைத் நாட்டில் கராஃபி நேஷ்னல் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களில், 5,000க்கும் மேற்பட்ட தமிழர்களும் இருக்கிறார்கள்.

அந்த நிறுவனம் கடந்த மூன்று மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. இதுதொடர்பாக பலமுறை பேச்சு நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதைக் கண்டித்து இந்தியத் தொழிலாளர்கள் உட்பட 22,000 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாமின் வாயிலை நிர்வாகம் பூட்டி விட்டது. அதனால் அங்கிருந்து தொழிலாளர்கள் வெளியேற முடியவில்லை. சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தவிக்கிறார்கள்.
இந்நிலையில் தங்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தைப் பெற்றுத் தந்து, தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel