டெல்லி: தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களையும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிக்கும், ஆனால் உயிரிழப்புக்கு குறைவான வாய்ப்பே உள்ளது என்று  ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கவும், தொற்றில் இருந்து பாதுகாக்கவும்  தடுக்கவும் தடுப்பூசி ஒன்றே வழி என்று உலக சுகாதார நிறுவனமும், உலக நாடுகளும் கூறி வந்தன. ஆனால், கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில் பரவி வருவதால், அதை முழுமையாக கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இருந்தாலும் நாடுகளில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் தடுப்பூசி 2 டோஸ் எடுக்கக்கொண்டவர்களும் டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று தெரிவித்து உள்ளது. ஏற்கனவே, டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றை தடுப்பூசிகள் கட்டுப்படுத்த வில்லை என்று சில நாடுகள் கூறி வருகின்றன. மேலும் 3வது டோஸ் தடுப்பூசிகளை செலுத்தும் பணியிலும் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில், டெல்டா வகை கொரோனா, தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாத நபர்களையும் பாதிக்கும் திறன் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த டெல்டா வகை கொரோனா தடுப்பூசி போட்ட நபர்களை பாதிக்கும் பொழுது உயிரிழப்பு மிக குறைவாக இருக்கும் என தெரிவித்து உள்ளது.