சென்னை: அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாண்டு படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான அவகாசம் வருகிற 14-ந்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகளில் 5,050 இடங்களும், கே கே நகர் இஎஸ் ஐ மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதையடுத்து, மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 16 ந் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வை மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு ஜூலை 20 ந் தேதி முதல் ஆகஸ்ட் 6 ந் தேதி வரையில் நடைபெற்றது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட மாணவா் சோ்க்கை நிறைவடைந்து உள்ளது. இதில், சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் தவிர, மற்ற இடங்கள் இணைய வழியில் நடைபெற்றது. அதன்படி, அனைத்து இடங்களும் தகுதியான மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான சோ்க்கை ஆணை பெற்றவா்கள் 11ந்தேதி மாலைக்குள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராத இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கான அவகாசம்14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ மாணவா் தோ்வுக்குழு செயலா் முத்துசெல்வன் கூறுகையில், கல்விக் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும் என பெற்றோா் கோரிக்கை வைத்தனா். அதை ஏற்று, மருத்துவ இடங்களைப் பெற்ற மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்பின், கல்லூரிகளில் சேராதவா்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்றாா்.