கரூர்: தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்த இனி கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வதுஅலையின் தாக்கம் காரணமாக கடந்த ஒரு மாதமாக பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரமாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணத்திலும் கடுமையான குளறுபடிகள் நீடித்து வருகின்றன. மின்கணக்கீடு செய்ய அலுவலர்கள் வராத நிலையில், கடந்த ஆண்டு இதே மாத பில்லை கட்டச்சொல்லி மின்சார வாரியம் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால், மின்கட்டணம் கட்டுவதற்கு கால அவகாசம் அளிக்கும்படி பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளன.
சிறு,குறு தொழிசாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின்சார கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் மே 31-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் அதனை ஜூன் 15-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக மின்சாரத்துறை உத்தரவிட்டது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு அவகாசம் மேலும் நீட்டிக்கப் பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில், கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்த இனி கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது. தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் இனி மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு கிடையாது. கொரோனா தளர்வுகளில், 50 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டதால் மின் கட்டணம் கட்டுவதற்கான அவகாசம் தேவைப்படாது என தெரிவித்தார்.
அமைச்சரின் கறார் பேச்சு, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.