பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திண்டிவனத்தில் நேற்று 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்த திருமணத்தில், 39 ஜோடிகளில் ஒருவராக நேற்றைய தினம் திருமணம் செய்துக்கொண்ட கிறிஸ்டோபர் தம்பதியின் குழந்தைக்கு இன்றைய தினம், திண்டிவனத்தில் உள்ள தனியார் மகாலில் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சீர்வரிசை உள்ளிட்ட சம்பிரதாயங்களுடன் இரண்டு வேளை அறுசுவை விருந்து பரிமாறப்பட்டு தடபுடலாக நடைபெற்ற இந்த திருமணத்தை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த தனியார் பள்ளி அறக்கட்டளையின் நிர்வாகி ஹரிகிருஷ்ணன் பாஜக-வில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக இருந்து வரும் நிலையில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலியெடுத்துக் கொடுத்து திருமணத்தை தலைமை தாங்கி நடத்திவைத்தார்.
இதில் திண்டிவனம் – கிடங்கல் 2 பகுதியை சேர்ந்த ராஜா (எ) கிறிஸ்டோபர் மற்றும் எபினேசர் சகோதரர்களுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இவர்கள் இருவரும் ஏற்கனவே திருமணமானவர்கள் என்றும் இதில் அண்ணன் கிறிஸ்டோபருக்கு ஒரு குழந்தையும், தம்பி எபினேசருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதே போல், அதே பகுதியை சேர்ந்த திவாகர் என்ற இளைஞருக்கும் ஏற்கனவே மயிலம் கோயிலில் திருமணம் ஆகிவிட்டதாம். ஆனாலும், இந்த 3 பேரும் தங்களுடைய மனைவியருடன் நேற்றைய தினம் பாஜக திருமண நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்டதாகவும் இவர்களைப் போன்று ஏற்கனவே திருமணமான வேறு சில தம்பதிகளும் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் தாலிகட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிறிஸ்டோபர் தம்பதியின் குழந்தைக்கு இன்றைய தினம், திண்டிவனத்தில் உள்ள தனியார் மகாலில் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதேவேளையில் இந்த திருமணத்தை நடத்தி வைத்த பாஜக நிர்வாகி ஹரிகிருஷ்ணனின் தந்தையும் அறக்கட்டளையின் தலைவரும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான அதிமுக நிர்வாகி எஸ்.முரளி (எ) ரகுராமன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகக் கூறி அவரை அதிமுக-வில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.