இந்தோனேஷியா கடற்படையிடம் சிக்கிய இலங்கை அகதிகளின் அவதி தொடர்கிறது.
இலங்கை தமிழர்கள் 44 பேர், ஒரு குழுவாக ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்ல திட்டமிட்டு மீன்பிடி படகில் பயணமானார்கள். இந்த குழுவில் 20 ஆண்கள், ஒரு கர்ப்பிணி பெண் உட்பட 15 பெண்கள் 9 குழந்தைகள் உள்ளனர்.
ஆஸ்திரேலியா செல்லும் வழியில் இந்தோனேசியாவின் அச்சே தீவு அருகே கடந்த 11ம் தேதி இவர்களது எரிபொருள் இல்லாததாலும், பழுதடைந்ததாலும் நின்றுவிட்டது.
நடுக்கடலில் தத்தளித்தபடி நின்று கொண்டிருந்த படகை பார்த்த இந்தோனேசிய கடற்படையினர் பார்த்து, படகை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். அகதிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், அவர்கள் தரையிறங்க இந்தோனேஷி அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.
இந்தநிலையில், “உணவு, எரிபொருள் இன்றி தத்தளிக்கிறோம். தரையிரங்க அனுமதி கொடுங்கள் அல்லது எங்களை சுட்டுவிடுங்கள்” என அகதிகள் கெஞ்சினர்.
இது குறித்து இந்தோனேசிய கடற்படை கமாண்டர் தருல் அமின் கூறும்போது, ‘நடுக்கடலில் நின்ற படகை பிடித்து விசாரித்த போது, படகு தொழில்நுட்ப கோளாறால் நின்றுள்ளது என கூறினர். ஆனால் எங்களது இன்ஜினியர்கள் சோதித்து பார்த்த போது, அதில் எந்த பிரச்னையும் இல்லை என்பது தெரிந்தது. அவர்களுக்கு உணவு, எரிபொருள் உள்ளிட்ட உதவிகள் தர தயாராக உள்ளோம்.
ஆனால் உடனடியாக எங்களது கடல் எல்லையை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளோம். இருப்பினும் தற்போது வானிலை மோசமாக இருப்பதால், சீரான நிலைக்கு வந்தவுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்’ என்றார்.
தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியா சென்றாலும் அங்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.